வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 நவம்பர், 2012

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார்: ஜெயலலிதா


நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது. இந் நிலையில் சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. அதில், நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிமுக எம்பிக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் ஏற்கனவே எதிர்த்து வருகிறோம். இதுகுறித்து ஏற்கனவே நான் விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறியிருக்கிறோம். இதில் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஜெயலலிதா, இருக்கலாம். ஆனால் இதுவரை எங்களை யாரும் இது தொடர்பாக தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு அது வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்து எங்கள் நிலையை முடிவு செய்வோம் என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது காங்கிரஸ் அரசு நடத்திய நாடகம் என்றார். ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி நடக்கிறதே என்று கேட்டதற்கு, அது அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றார். நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்தற்கு, நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்றார் ஜெயலலிதா. இடதுசாரிகளின் ஆதரவு கோரும் மம்தா: இந் நிலையில் இந்தத் தீர்மானத்தை இடதுசாரிகளும் பாஜகவும் ஆதரிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கூறியுள்ளது. பாஜக ஆதரவு கிடைக்குமா?: அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பாஜக தலைவர்களின் கூட்டம் இன்று மூத்த தலைவர் அத்வானியின் இல்லத்தில் நடந்தது. ஆனால், இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதை வெற்றி பெறச் செய்வது கடினம் என்பதால், இதை ஆதரிப்பது என்பது நமக்குத் தோல்வியைத் தந்துவிடும் என்று பல தலைவர்களும் கருத்துத் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடமும் பேசிவிட்டு இதில் இறுதி முடிவெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’