வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கைக்குரிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



யாழ்.மாவட்டத்திற்கான இந்திய அரசினது இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தென்மராட்சியில் தொடக்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவின் எழுதுமட்டுவாள் கிராமத்திற்கு இன்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சாவகச்சேரி, மருதங்கேணி மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் முதற்கட்டமாக வீட்டுத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்பிரகாரம் எழுதுமட்டுவாள் தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்ட மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான பத்திரங்கள்; வழங்கப்பட்டன.
சான்றிதழ்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக வாணிபதுறை அமைச்சர் றிசாட் பதியுதீன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, துணை தூதுவர் மகாலிங்கம், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) ஆகியோர் வழங்கி வைத்தனர்.

முன்பதாக அமைச்சர்கள் உள்ளடங்கிய அதிதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி, வரவேற்றதைத் தொடர்ந்து நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கைக்குரிய நிகழ்வு இன்று நடந்தேறியுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோருக்கு எமது மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களுடன் நான் புதுடில்லிக்கு சென்றிருந்த சமயம் குறிப்பிட்ட இந்திய வீட்டுத் திட்டம் கிடைக்கப் பெற்றது. அந்த வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்;ட மற்றும் வீடுகளை முற்றாக இழந்த மற்றும் வறுமை நிலைக்குட்பட்டவர்களை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதுடன், யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் இந்திய அரசின் உதவித் திட்டம் கிடைக்கப் பெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் கட்டத் திட்டத்தில் முதற்கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 16 வீடுகளும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 193 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 146 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
இதன்போது வடமாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, உள்ளிட்ட பிரதேச செயலர்கள், அரச திணைக்களங்களைச் சார்ந்த பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், யாழ்.மாவட்டத்தில் 8000 பயனாளிகள் இந்திய அரசின் கீழ் வீடுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட எழுதுமட்டுவாள் சந்தைக் கட்டிடத்தையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.









-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’