இந்திய மத்திய அமைச்சரவையில் ஓரிரு தினங்களுக்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் அவர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தயதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாலும், புதிய அமைச்சரவை நியமனம் விஷயத்தில் கூட்டணி கட்சிகளின் நிபந்தனையாலும் அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதேவேளை பிரதமர் மன்மோகன்சிங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதியை ராகுல்காந்தி சந்தித்தது அரசியல் முக்கியத்தவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதேவேளை சமையல் எரிவாயு கட்டுப்பாடு, அன்னிய முதலீடு கொள்கை காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியது. அந்த கட்சியின் மந்திரிகள் 6 பேர் ராஜினாமா செய்த பின்பு அவர்களுக்கு பதிலாக புதிய மந்திரிகள் நியமிக்கப்படாமல் மத்திய அமைச்சர்கள் அவர்களுடைய பணிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து இருப்பதால் அரசு திட்டங்களை செயல் படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. பணிகளை துரிதப்படுத்த முக்கிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய மந்திரி சபையில் 15 புதிய மந்திரிகள் நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. ராகுல் காந்திக்கு மத்திய மந்திரிசபையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போதைக்கு அவர் கட்சி விவகாரங்களை மட்டுமே கவனிப்பார் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் புதிய மந்திரிகள் நியமனம் மற்றும் இலாகா ஒதுக்கீடு விஷயத்தில் அவரது ஆலோசனையும், தலையீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது. நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை இன்று நிறைவு பெறுவதை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்ற கூறப்படுகிறது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’