ச ரத் பொன்சேகா தலைமையில் நாளை நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாம் கலந்துகொள்ளப் போவதில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து கூட்டணிகளையும், ஜனநாயக சக்திகளையும் நாம் வரவேற்கிறோம்" என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரைிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியையும், தமிழ் - முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசுக்கு எதிரான ஒரு பாரிய கூட்டணி ஏற்படும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பின்னணியிலிருந்து நமது கட்சி ஆற்றிய பணி இன்று மீண்டும் தொடரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்நாட்டை ஆண்ட அனைத்து பெரும்பான்மை அரசாங்கங்களும் தமிழ் பேசும் மக்களை கூட குறைய பந்தாடியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சி ஆட்சிகளிலும் தமிழ் மக்கள் மிகப்பெரும் இன வன்செயல்களுக்கு முகம் கொடுத்தார்கள். இவற்றை யாரும் மறுக்க முடியாது. முன்னணி பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் எவரும் தேவதூதர்கள் கிடையாது. இந்நாட்டு, பெரும்பான்மை கட்சிகளில் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் இல்லை. இந்த அடிப்படை உண்மையை அறிந்துகொண்டதால் தான், நாம் நமது கட்சியை தனித்துவமாக நடத்துகின்றோம். அதேவேளையில், நடைமுறை அரசியல் காரணங்கள் காரணமாக அவசியமான வேளைகளில் மாத்திரம் கூட்டு சேருகின்றோம். ஆனால், இலங்கை வரலாற்றில் இந்த நடப்பு அரசாங்கத்தைபோல் தமிழ், முஸ்லிம் மக்களை இனரீதியாகவும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களை மதரீதியாகவும் தேடித்தேடி பந்தாடும் அரசாங்கம் இருந்தது இல்லை. வடக்கு, தெற்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த ஆட்சியின் கீழ் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவது மக்களுடன் மக்களாக நிற்கும் எனக்கு மிக நன்றாக தெரியும். எனவே இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும். இந்த அரசாங்கம் ஒரு பெரிய பிசாசு. இந்த பெரிய பிசாசை வீழ்த்த அவசியமானால் சின்ன பிசாசுகளுடனும், பேய்களுடனும், தேவதைகளுடனும், மனிதர்களுடனும் கூட்டு சேருவதற்கு நாம் தயாராக வேண்டும். ஆனால், இந்த அரசாங்கத்தை வீழ்த்த தனி ஒரு கட்சியாலோ, தனி ஒரு கூட்டணியாலோ முடியாது. அனைத்து எதிர்கட்சிகளும், ஒன்று சேருகின்ற சந்தர்ப்பத்திலேயே இது சாத்தியம். எனவே, சரத் பொன்சேகாவின் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை கடந்த வெள்ளிக்கிழமை கூடிய எமது அரசியல்குழு ஏகமனதாக எடுத்துள்ளது. இதுபற்றி எமக்கு அழைப்பு விடுத்த சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளோம். பெரும்பான்மை சிங்கள மக்களையும், தமிழ் பேசும் மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒரு கூட்டணி உருவாக வேண்டும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பின்னணியிலிருந்து நமது கட்சி ஆற்றிய பணி மீண்டும் தொடரும்." -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’