வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 அக்டோபர், 2012

உண்ணாவிரதப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுமேயானால் நோர்வேயில் விளைவுகள் அதிகரிக்கும்: பெற்றோர் எச்சரிக்கை



நோர்வேயில் வதியும் வெளிநாட்டவர்களின் குழந்தைகளை நோர்வே பிரஜைகளாக்கும் திட்டத்தில் நோர்வே அரசாங்கம் குழந்தைகளையும் பெற்றோரையும் பிரித்து, இரு சாராரையும் உளவியல் தாக்கத்துக்கு ஆளாக்கிவருவதாக குற்றம் சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர்,
ஒஸ்லோவில் நடைபெற்ற சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுமேயானால் விளைவுகள் அதிகமானதாக இருப்பதுடன், பாரிய போராட்டம் ஒன்று வெடிப்பதைத் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். சிறுவர் காப்பகங்கள் தவறிழைத்திருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ள நோர்வே அரசு, பிரித்தெடுக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக உரிய பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நோர்வேயின் சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றங்களினூடாக அரச உதவியுடன் பொறுப்பான பெற்றோரிடம் குழந்தைகளை கையளிப்பதற்கு நோர்வேயில் சட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட இலங்கைப் பெற்றோரில் ஒருவரான தாமோதரம்பிள்ளை ஆனந்­த­ராசா, சிறுவர்கள் விடயத்தில் சிறுவர் காப்பகத்தின் பிடிவாதத்தன்மைக்கு நோர்வே அரசாங்கம் துணையாக நிற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் போராட்டம் தொடர்பிலான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக உலகளவில் வெளிவந்துள்ள நிலையில், பிள்ளைகளை காப்பகத்திடம் இழந்துநிற்கின்ற பெற்றோருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் திரண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது குழந்தைகளை சந்திப்பதற்கு தமக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர், நீதிமன்றத் தீர்ப்புக்கள் வரும் வரையில் குழந்தைகள் தமது பெற்றோரை அவர்களது வீடுகளிலேயே சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், நோர்வே பிரஜைகளுக்கு இந்த நடைமுறை அமுலில் இருப்பதாகவும் வெளி­நாட்டவர்களுக்கு இது மறுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவ்வாறு நோர்வே சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெற்றோர் தமது பிள்ளைகளைப் பிரிந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள பெற்றோர், இனியும் நோர்வே அரசு மௌனம் காத்திருக்கக் கூடாது காப்பக விவகாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’