சில நாடுகளை மட்டும் தெரிந்தெடுத்து அவற்றின் உள்விவகாரங்களில் எதேச்சாதிகாரமாக தலையிடும் தற்போதைய போக்கு காரணமாக ஐக்கிய நாடுகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து வருவதாக' இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 67ஆவது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகளின் பட்டயத்தில் பொறிக்கப்பட்ட அடிப்படை தத்துவமான நாடுகளின் சமத்துவம் என்பதன் அடிப்படையில் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். ஊலகளவில் பொருளாதார நெருக்கடி காணப்பட்ட நிலையில் கடந்த 2011இல் இலங்கை 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டதாக அவர் கூறினார். காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் எண்ணிக்கையில் குறைவான சில கைத்தொழில் நாடுகளே பெருமளவான காபனீரொட்சைட்டை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். இதனால், காலநிலை மாறி புவி வெப்பமாதல், அடிக்கடி வரும் வறட்சிகள், துருவப்பனிக்கட்டி குறைதல், ஒழுங்குமாறிப் பெய்யும் மழை, பனிப்படலம் உருவாகுதல், கடல்மட்டம் உயர்தல் போன்ற வழமைக்கு மாறான வானிலைக் கோலங்கள் என்பவற்றுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அவர் கூறினார். எமது நாடு, வெளியிடும் காபனீரொட்சைட்டின் அளவு புறக்கணிக்கத்தக்க அளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் பொது இலக்கில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு எனவும் அமைச்சர் தெரிவித்தார். மிலேனியம் அபிவிருத்தி தொடர்பாக இலங்கையில் பல சாதனங்களை சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையில் எழுத்தறிவு வீதம் 98 எனவும், 85 சதவீத மக்களுக்கு தரமான குடிநீர் இலகுவில் கிடைக்கின்றது எனவும் கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினரதும் குறைகளை தீர்த்துவைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது என அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக ஒரு வேலைத்திட்டத்தை வகுத்திருப்பதாகவும் அவர் கூறினார். கால எல்லை நிர்ணயிக்கப்பட்டு மனித உரிமைகளுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என அமைச்சர் பீரிஸ் கூறினார். யுத்தத்துக்கு பின்னரான நல்லிணக்கப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென வெளிப்படையான, ஜனநாயக வழியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் முன்மொழிந்துள்ள போதும் எதிர்க்கட்சிகள் இதை குழப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை 66/6 இலக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கியூபாவுக்கு எதிரான நீதியில்லாத பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகள் நீக்கப்பட வேண்டுமென கூறினார். பாலஸ்தீன மக்களுக்கான ஒரு நாடு அமைவதற்கு வழிவகுக்கும் பலஸ்தீனம் மீதான ஐ.நா.வின் தீர்மானம் அமுலாகுவதை இலங்கை பூரணமாக வரவேற்கின்றது என அவர் குறிப்பிட்டார். சமயங்கள் மற்றும் சமய தலைவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் யாவற்றை இலங்கை கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார். பேச்சுரிமை எமது விழுமிய முறைமையில் அடிப்படையாக இருப்பினும் நாம் எந்தவொரு சமயத்தினரதும் உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது. சமயங்களை கேலமாக்க சித்தரிப்பதை தடுக்கவும் சமய சின்னங்களைவ ர்த்தக நலனுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் சகல பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பீரிஸ் மேலும் கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’