கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கப்பாடும் முயற்சியுமானது 2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தை விடவும் ஆபத்தானது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வெறும் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மாத்திரமே பிரசாரத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளும் பயன்படுத்தின. ஆனால் ஆளும் கட்சி மாத்திரம் தான் தேசிய நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் சூழலில் செயற்பட்டது என்றும் அவர் கூறினார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், மூன்று மாகாண சபைகளுக்குமான வெற்றி பெற்றவர்களின் வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்ட வகையில் ஒரு மாகாணத்தில் தலா இரண்டு போனஸ் ஆசனம் வீதம் ஆறு ஆசனங்கள் கிடைக்கப் பெறவுள்ளன. இந்நிலையில் அரசினால் மிக எளிதில் ஆட்சியமைக்க முடியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வேடிக்கையென்றாலும் ஆபத்தும் கூடியது. 2002 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு நிலப்பரப்பையும் கடலில் பாதியினையும் எழுதிக் கொடுத்திருந்தார். இதைவிடவும் ஆபத்தானதே ஐ. தே. க. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்ட நடவடிக்கை என்பது அமைந்துள்ளது என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’