வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளத்தில் வெடித்தது கலவரம், போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு



கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு மக்களும் தாக்குதலில் இறங்கியதில் போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நேற்று சரமாரியாக மக்கள் குவிந்தனர். பல ஆயிரம் பேர் குவிந்து விட்டதைத் தொடர்ந்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் கடலோரத்தில் மக்கள் குவிந்திருந்ததால் விபரீதம் ஏற்படு் என்ற அச்சத்தில் போலீஸார் தடியடி உள்ளிட்டவற்றில் ஈடுபடாமல் இருந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர், டிஐஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் பயனில்லை. இதையடுத்து நேற்ஏறு இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நீடித்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகினர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு கலெக்டர் இறுதிக் கோரிக்கையை விடுத்தார். அனைவரும் சட்டவிரோதமாக கூடியுள்ளீர்கள். உடனடியாக அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்தார். இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களும் மணலை வாரி போலீஸார் மீது சரமாரியாக வீசினர். செருப்புகளையும் எடுத்து வீசினர். கட்டைகளும் வீசப்பட்டன. இதையடுத்து போலீஸார் திமுதிமுவென கடற்கரையில் கூடியிருந்தர்களை தடியடி நடத்தி விரட்டிச் சென்றனர். இதில் பலர் கீழே விழுந்தனர். தொடர்ச்சியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து ஏராளமானவர்கள் கடலுக்குள் இறங்கி போலீஸாரை நோக்கி கடுமையாக திட்டி கூச்சலிட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது மீண்டும் மண் வீசப்பட்டது. பலர் படகுகள் வழியாக கடலுக்குள் தப்பிச் சென்றனர். இந்த திடீர் திருப்பத்தால் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’