ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா என ஆராயப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கூறினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட நஜீப் எம்.மஜீத், சுமார் இரண்டரை வருடங்களில் முதலமைச்சர் பதவிலியிலிருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர் ஒருவர் முதலமைச்சராக நியமனம் பெற இடமளிக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல என கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு சந்திரகாந்தன் குறிப்பிட்டார். கிழக்கில் பல்கட்சி நிர்வாகம் அமைக்கும் வகையில் டியூ குணசேகர முன்வைத்துள்ள ஆலோசனைகள் தொடர்பாகவே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி ஆலோசகராக தான் நியமிக்கப்பட்டுள்ளதால் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என அவர் கூறினார். தற்போது கிழக்கில் காணப்படும் நிலைமையில் மூன்று சமூகங்களும் இணைந்து செயற்பட முடியுமாதலால் முஸ்லிம் பிரதம அமைச்சருடன் அல்லது முஸ்லிம் காங்கிரஸுடன் பிரச்சினை ஏற்படாது என அவர் கூறினார். இதன்போது, 'நீங்கள் முஸ்லிம் காங்கிரஸை நம்புகின்றீர்களா?' என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சந்திரகாந்தன், 'முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, கிழக்கு மாகாண நிர்வாகத்தை அமைத்துள்ளதால் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை' என கூறினார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பின்னடைவைக் கண்டுள்ள போதும், அக்கட்சி வருங்காலத்தில் பெரும் சக்தியாக உருவாகும் என அவர் மேலும் கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’