இலங்கையுடனான நட்புறவை சிறு சிறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென்றும் அந்த நட்புறவை உரிய மட்டத்தில் உறுதி செய்ய வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை போன்று பாதுகாப்பு நடவடிக்கைளும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கை உத்தியோக பூர்வமாக சந்தித்து பேசிய போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இப்பேச்சுக்களின் மேலும் கருத்து தெரிவித்துள்ள இந்தியப்பிரதமர் இரண்டு நாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பொருளாதார நடவடிக்கைகள் போன்று பாதுகாப்பு தொடர்பிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும். அத்தோடு இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் வடக்கில் மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெறுமனே பொருளாதார ரீதியில் தொடர்புகளை பேணுவது மட்டுமல்ல தெற்காசியாவை சௌபாக்கியமிக்கதாக அபிவிருத்தி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்வதே இந்தியாவின் அபிலாஷையாகும். அதற்கேற்றவாறே பொருளாதார திட்டங்கள் தயாரிக்கப்படுமென்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். கபிலவஸ்து புத்தரின் புனிதச் சின்னங்களுக்கு இலங்கை மக்கள் வழங்கிய கௌரவம் பக்தி பூர்வமான மத அனுஷ்டானங்கள் தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த இந்தியப் பிரதமர் இதன் மூலம் இந்திய இலங்கை மக்களிடையேயான நட்புறவின் பலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இரண்டு நாடுகளுக்குமிடையேயான நட்புறவை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்காக இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அவசியம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சாதின் வாஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’