கை லாய பயணம் மேற்கொண்டிருந்த நித்யானந்தா நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் ஆண்மைப் பரிசோதனையை எதிர்கொண்டுள்ள நித்யானந்தா,
திடீரென கைலாய யாத்திரை சென்றுவிட்டார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஞ்சிதாவை நித்யானந்தா அழைத்துச் சென்றது தனக்குத் தெரியாது என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தார். இதற்கிடையே டெல்லி விமான நிலையத்தில் நித்யானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்டுகளுடன் ஒரு நபர் பிடிபட்டார். இந் நிலையில் தனது கைலாய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்த நிதியானந்தா நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அங்கு நிருபர்களிடம் பேசிய அவர், எனது கைலாய பயணம் மிகத் திருப்தியாக இருந்தது. இந்தப் பயணம் எனக்குப் பெரும் மன நிறைவைத் தந்தது. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை. அதை சட்டப்படி சந்திப்பேன் என்றார். பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு நித்யானந்தா தனது சீடர்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கைலாய மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் செய்த அவர், புனித நீரை பக்தர்கள் மீதும் தெளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய நித்யானந்தா, ஒவ்வொரு ஆண்டும் கைலாய யாத்திரையை முடித்துவிட்டு காசி, ராமேஸ்வரம், திருவண்ணாமலைக்குச் செல்வேன். இந்த முறை முதலில் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். இங்கிருந்து மதுரை சென்று சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்கிறேன். அதன்பின் காசி, ராமேஸ்வரம் செல்கிறேன். மதுரை ஆதீனத்துக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யபட்டதாக வந்த தகவல் பொய்யானது. அப்படி பறிமுதல் செய்து இருந்தால் கைலாயத்தில் இருந்து என்னால் திரும்பி இருக்க முடியாது. என்னிடம் மருத்துவ பரிசோதனை (ஆண்மை பரிசோதனை) நடத்த கர்நாடக நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளோம். நீதிமன்றம் பரிசோதனைக்கு உத்தரவிட்டால் அதற்கு நான் தலைவணங்குவேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’