வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இரு இனங்களும் பேசி பிரச்சினையை தீரக்க விரும்புகிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: சம்பந்தனுக்கு பஷீர் பதில்



கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமொன்றில் பேசியிருப்பதை ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டேன். நான் என்றும் மதிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இதுதான். நாங்கள் இரண்டு இனமும் ஒன்றாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விளைகின்றோம் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்" என பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் பசீர்சேகுதாவூத் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலே முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு வரியைத்தவிர முஸ்லிம்கள் பற்றி வேறு எதுமே அந்த அறிக்கையில் கிடையாது. வடக்கிலே இருந்து பலவீனமான அடிப்படையில் 75000இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வெறும் கால் நடையாக துரத்தியடிக்கப்பட்டது மனித உரிமை மீறலில்லையா? அதைபற்றி கணக்கெடுத்து பேசுவதற்கு இறுதியுத்தம் தடையாக இருக்க முடியுமா? தமிழ் சமுதாயம் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்ட துன்பமும் வேதனையையும் நாங்கள் நன்கு அறிவோம். அதற்காக கண்ணீர் விட்டழுது தமிழ் சமுதாயத்திற்காக பேசத்தயாராக இருக்கின்றோம். அதேநேரம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பள்ளிவாயல்களில், வீதிகளில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும் வீடுகளுக்கள் புகுந்து பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள், வயிற்றக்குள் இருந்த சிசுக்கல் கீறிக்கிழக்கப்பட்டு கொல்லப்பட்ட சமுதாயமாக முஸ்லிம் சமதாயமும் உள்ளது. கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, பறிக்கப்பட்டு அகதிகளாய் அனாதைகளாய் இருக்கின்ற சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். மட்டக்களப்பில் மாத்திரம் 37 முஸ்லிம் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். மீண்டும் இன்று மீள்குடியேறிய போது அவர்களை விரட்டியடிக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இதைபற்றி தமிழ் சமுதாயத்திற்குள் பேசுகின்ற தமிழ் தலைமைகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம்களுக்குள் தமிழர்களுக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்படுகின்றபோது அதை தடுத்து நிறுத்துகின்ற கரங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இதைபற்றி யார் பேசுவது? முஸ்லிம்களின் இந்த நிலையைப்பற்றி யார் பேசுவது? ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டிலே முஸ்லிம்களுக்கு நடந்த இந்த அநீதிகள் பற்றி பேசுவதற்கு யாருமில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையோ? முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளையோ முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதையோ பற்றி பேசுவதற்கு ஜெனீவாவில் யாருமில்லை. முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அநீதிகளும் முஸ்லிம்கள் வடக்கிலே இருந்து விரட்டியக்கப்பட்ட நிலையையும் ஜெனீவா மனித உரிமை மாநாட்டிலே எடுத்துச் சொல்லும் நிலைமை வரவேண்டும். முஸ்லிம்கள் இழந்த இந்த இழப்புக்களுக்கு நிவாரணம் என்பது முஸ்லிம்களின் அரசியல் உரிமையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கல்லையும் மண்ணையும் குவித்த அபிவிருத்திகளல்ல. கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமொன்றில் பேசியிருப்பதை ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரிதான் அல்லது சிங்கள தேசியக் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரிதான் எந்த ஒப்பந்தமுமில்லாமல் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்த வித உத்தரவாதங்களுமில்லாத வகையிலே நாங்கள் உங்களுக்கு பின்னால் வருவோமென்று எதிர்பார்க்க வேண்டாம். நாங்கள் வரத்தயாராக இருக்கின்றோம். யாரோடும் ஆட்சியமைக்க தயாராக இருக்கின்றோம். சில வேளைகளில் எதிர்க்கட்சியிலிருந்து ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றோம். இதுபற்றி தேர்தல் முடிந்த பின்னரே நாங்கள் முடிவை சொல்லமுடியுமே தவிர இப்போது எந்த முடிவையும் எங்களால் சொல்லமுடியாது. நான் என்றும் மதிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இதுதான். நாங்கள் இரண்டு இனமும் ஒன்றாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விளைகின்றோம் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். எந்த வொரு தீர்வுத்திட்டமும் அரசாங்கத்திற்கு கையளிக்கப்படும் போது சர்வதேச சமூகங்களின் மேசைகளில் போடுகின்றபோது இரண்டு கட்சிகளும் இரண்டு சமூகங்களின் தலைவர்களும் சேர்ந்த கலந்துரையாடலின் போது சேர்ந்து தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்திற்கூடாக மாத்திரம் தான் நாங்கள் பயணிக்கமுடியும் என்பதை நான் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், மற்றும் காங்கிரஸின் பிரதி தலைவர் முழக்கம் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’