யாழ். குடாநாட்டில் இராணுவக் குறைப்பை மேற்கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இருப்பினும் இங்கு இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினர் தெரிவித்தனர்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ்.குடாநாட்டிற்கு சென்றுள்ள ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷிக்கும் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினருக்கும் இடையில் யாழ். ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே யசூஷி அகாஷியிடம், சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினர் இவ்வாறு கூறினர். இந்த சந்திப்பின்போது சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். குடாநாட்டில் இராணுவக் குறைப்பை மேற்கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இருப்பினும் இராணுவப் பிரசன்னம் யாழ்.குடாநாட்டில் குறைந்ததாக இல்லை. யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களானபோதிலும், அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழர்களுக்கான தீர்வை வழங்கப்போகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் என 3 வருடங்களாக அரசாங்கம் கூறிவருகின்றதே தவிர, அதற்கான வழி எதனையும் அரசாங்கம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்த நிலையில் இற்றைவரை சீரான முறையில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுவருகின்றன. வடபகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி, முஸ்லிம் மக்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். யுத்த சூழ்நிலையில் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியிருந்த 5,000 முஸ்லிம்; குடும்பங்களில் 500 குடும்பங்களே இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தம் காரணமாக 40,000 பெண்கள் விதவைகளாக உள்ளதுடன், இதிலும் 25,000 பேர் யாழ்.குடாநாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். தற்போது யாழ்.குடாநாட்டில் கழிவு எண்ணெய்க் கலாசாரம் அரங்கேறிவருகின்றது. 3 நாட்களுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அத்துடன், 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்துள்ளது. ஏனைய மாகாணங்களைப்போன்று மாகாணசபை அதிகாரங்களை தமிழ் மக்கள் அனுபவிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 60 வருடங்களாக தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றனர் இதேவேளை, வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதற்கும் அங்குள்ள மயானங்களைப் பயன்படுத்துவதற்கும் கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வசந்த கருணாகொடவிடம், சமாதானத்திற்கும் நல்லிணத்துக்குமான குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பில் ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட, யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மாச்சாரிய ஞானதேசிகர் சுவாமி, மௌலவி சுபியான், யாழ். நாகவிகாரை பீடாதிபதி, வாழ்நாள் போராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் மற்றும் சமாதானத்துக்கும்; நல்லிணக்கத்துக்குமான குழுவின் உறுப்பினர்களான பூரணச்சந்திரன், பரமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’