த மிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் இதனைத் தடுக்க வேண்டுமாயின் தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினரையும் கண்காணிப்பதற்காக தனுஷ்கோடியில் இந்திய இராணுவ தளமொன்றை அமைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோடியக்கரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக மீனவர்கள் இவ்வாறு அவ்வப்போது தாக்கப்படுவதும், உடனே தமிழக அரசின் சார்பில் அதைப்பற்றி இந்திய மத்திய அரசிடமும், பிரதமரிடமும் முறையிடுவதும், அவர்கள் நம்மை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை தூதுவரிடமோ, இலங்கை அரசிடமோ தெரிவிப்பதும்; அவர்களும் இந்திய அரசிடம் இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று உறுதி கூறுவதும்; ஆனால் அதற்கு இரண்டொரு நாட்களிலேயே இலங்கைக் கடற்படையினர் நமது மீனவர்களைத் தாக்குவதும் என்பதும் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை. இதுவரை நடைபெற்ற இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் என்ற புள்ளிவிவரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் 1991 முதல் 2011 வரை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 16,7;85 பேர் உயிரிழந்துள்ளனர்;. 180 பேர் காயமடைந்துள்ளனர்;. 2006 முதல் 2011 வரை 146 படகுகள், இலங்கை கடற்படையினரால், பறிமுதல் செய்யப்பட்டும், 746 மீனவர்கள் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இதில் 131 படகுகள் மற்றும் 741 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில்கூட இந்திய மீனவர்களின் இந்தக் கொடுமைகளை விவரிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது. இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்த கச்சத்தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்துகிறார்கள். இந்தக் நடவடிக்கைக்கு முடிவு கட்ட, கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்திய இராணுவத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றி ஒரு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் நமது மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதற்கொரு நிரந்தர முடிவு காண நமது இந்திய அரசுதான் முனைப்போடு செயல்பட வேண்டும். இலங்கை அரசிடம் முறைப்படி ஒரு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் நமக்கொரு சமாதானம் அளிப்பது என்பதோடு இந்தப் பிரச்சினை முடிந்து விடாமல், இனியொருமுறை இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உறுதியானதொரு நிரந்தர வழிவகையைக் காண வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் கருணாநிதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’