பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும், முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் செந்தூரனை விடுவிக்கக் கோரியும் அகதிகள் முகாம் முன்பு மதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது முகாமை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து மதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள செந்தூரன் என்பவர் கடந்த 6ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரை காப்பாற்றக் கோரியும், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மதிமுக சார்பில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது பேசிய வைகோ, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் சிறையில் இருந்தார். அவர் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால் தமிழக போலீசார் செந்தூரனை கேரள போலீசார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும். இதற்காகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் வைகோ. பின்னர் முற்றுகை போராட்டம் நடத்த பூந்தமல்லி முகாம் நோக்கி வைகோ தனது தொண்டர்களுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றார். ஆனால், அவர் மேடையில் இருந்து இறங்கியதும் வைகோவை கைது செய்த போலீசார் உடனடியாக வேனில் ஏற்றிச் சென்றனர். வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நின்றன. போலீசார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர். அப்போது பூந்தமல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த மதிமுக கிளைச் செயலாளர் செல்லக்கனி உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் உடனடியாகத் தடுத்து கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’