வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஜூலை, 2012

நாட்டின் நிலை திருப்தியளிக்கவில்லை: நாமலிடம் மல்வத்தை பீடாதிபதி தெரிவிப்பு


நா ட்டின் தற்போதைய நிலை குறித்து தனது அதிருப்தியை மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரான திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் வெளிப்படுத்தியுள்ளார். "நாட்டின் தற்போதைய நிலை குறித்து நாம் திருப்தியடையவில்லை. ஜனாதிபதிக்கு இது குறித்து நாம் பல தடவை தெரிவித்துள்ளேம். ஆனால், பலன் கிடைக்கவில்லை" என கண்டியிலுள்ள மல்வத்தை தேவாலயத்தில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கூறினார்.
"சிறுவர் துஷ்பிரயோகங்களில் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு, மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். பௌத்த பிக்குகள் சிலர் பதவிகளை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு தகுதியில்லாதவிடத்து, இத்தகைய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. பாடசாலை ஆசிரியர் பதவியைத் தவிர வேறு எந்த அரசாங்க பதவியையும் பௌத்த பிக்குகள் வகிக்கக்கூடாது. பிக்குகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கோரிக்கையும் ஏற்கப்படக்கூடாது. இது குறித்து மோட்டார் வாகன ஆணையாளரிடம் நான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளேன் என அவர் கூறினார். அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகள், விரயமாக்கப்படாமல் அந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். தம்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு வினைத்திறனாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தூரப்பிரதேசங்களிலுள்ள தம்ம பாடசாலைகள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றன. அவற்றுக்கு அரசாங்க ஆதரவு அவசியம். சிரேஷ்ட அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக பதவி வகித்தபோது, தர்மாச்சரிய பரீட்சையில் சித்தியடைந்த தம்ம பாடசாலை ஆசிரியர்களுக்கு, அரசாங்க ஆசிரியர்களைப் போன்ற நியமனம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை' எனவும் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறினார். திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரரின் கருத்துக்களை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்தார். சமூக பெறுமானங்களை முன்னேற்றுவதற்கு பிரதமரின் ஆலோசனையுடன் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கூறினார். தங்காலை மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’