நீதிமன்றச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டையும், நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலையும் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முடங்கியுள்ளன.
மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனுக்குத் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை நீதிபதிகள் சங்கத்தினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தலைக் கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாகவும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டமும் பணிபுறக்கணிப்பும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனுடைய வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் யாழ். சட்டத்தரணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள், நீதிமன்ற ஊழியர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
கிளிநொச்சி நீதிமன்றத்தின் முன்னால் ஏ9 வீதி ஆர்ப்பாட்டக்காரர்களினால் மறிக்கப்பட்டிருந்தனால் மாற்று வழியாக வாகனப் போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டிருந்தது.
அமைச்சருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
இதனிடையே, அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது எனக்கோரியும் வவுனியா நகர பள்ளிவாசலில் தொழுகையின் பின்னர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
பள்ளிவாசலின் முன்னால் திரண்ட முஸ்லிம்கள் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
தமது ஆர்ப்பாட்டமானது எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது சமயத்திற்கோ எதிரானது அல்ல என இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கருத்து தெரிவித்த வவுனியா பள்ளிவாசல் தலைவர் பி.எஸ்.அப்துல்லா கூறியுள்ளார்.
காணி விடயத்தில் மன்னாரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
வவுனியாவில் நீதிமன்றத்தின் முன்னால் சட்டத்தரணிகளும், நகரில் பள்ளிவாசலுக்கு எதிரில் முஸ்லிம்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததனால், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக பொலிசார் பலத்த பாதகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கலகம் அடக்கும் பொலிசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மன்னாரில் புதனன்று நீதிமன்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, கல் எறிந்து கலகத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டிருந்ததனால், முஸ்லிம் இளைஞர்கள் நகருக்குள் செல்வதற்கு அச்சமடைந்திருந்ததாக முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கூறினார்.
யார் யார் கைது செய்யப்படுவார்கள் என்பது தெரியாத நிலையில் அங்கு பதற்றம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியிலும் நகரப்பகுதியிலும் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மாற்றிடம்
மன்னார் கோந்தைப்பிட்டியில் தொழில் செய்து வருகின்ற மன்னார் ஜோசப்வாஸ் நகர மீனவர்களுக்கு கடற்தொழில் செய்வதற்கென மாற்றிடம் ஒன்றை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
கோந்தைப்பிட்டி தமிழ் மீனவர்களுக்கு மாற்றுத் தொழிலிடம் ஒன்றினை 3 வார காலப் பகுதிக்குள் ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதன்கிழமை மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’