தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நெல்லியடி பஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, மேற்படி புலிக்கொடி விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், ஐக்கிய தேசிய கட்சியினரால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் புலிக்கொடி ஏந்தியவாறு மர்ம நபர்கள் நடமாடியதை ஞாபகப்படுத்தினார். அந்த சம்பவத்தை அடுத்து விசாணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய மேற்படி ஊடகவியலாளர், நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் அரசாங்கம் பாராமுகம் காண்பிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் தாமதிக்காத அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 'விசாரிக்கப்படும்' என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு வேறு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’