சர்வதேசத்தின் சவால்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து இலங்கையைப் பாதுகாக்க வேண்டியது வெளிநாட்டில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளின் பொறுப்பாகும். இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியாக மேம்படுத்துவதற்கான கடப்பாட்டை இராஜதந்திரிகளும் கொண்டுள்ளீர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளில் விஸ்தரித்து வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு சவாலான வகையில் பிரசாரங்களை செய்து வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில் அந்த நாடுகளின் ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் முன்னெடுக்க வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இராஜதந்திரிகளுக்கான இரு நாள் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களது சொந்த நாடு தொடர்பாக மிக ஆழமான புரிந்துணர்வு உங்களுக்கு உள்ளது. எனவே தான் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து வெளிநாடுகளில் இராஜதந்திரிகளாக உள்ளீர்கள். இலங்கைக்கு எதிராக அந்நாடுகளிலிருந்து எழும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். இராஜதந்திரிகளின் நடவடிக்கைகள் மாற்றமடைந்து வருகின்றன. இதுவே இராஜதந்திரத்தின் மாற்றமாகவும் அமையப் போகின்றது. எனவே இராஜதந்திரம் தொடர்பாக புதிதாக கற்பவர்களுக்கு புதிய திருப்பமாக மாற்றமடையும் இராஜதந்திர நடவடிக்கைகள் அமையும். மேற்குலக நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களினால் இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றன. இதனால் பல சவால்களும் உருவாகியுள்ளன. புலம்பெயர்ந்தோர் என்று கூறிக் கொள்ளும் புலி ஆதரவாளர்களுக்கு அந்நாடுகளின் ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக இலங்கை தொடர்பில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். இதனை முறியடிக்க உள்நாட்டில் உள்ள அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் உறுதிப்படுத்தி பொருளாதார இலக்குகளை அடைவதே இலங்கையின் நோக்கம் என்பதனை அனைத்துத் தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். அயல் நாடுகளுடனும் ஏனைய நாடுகளுடனும் சிறந்த நட்புறவை வளர்த்துக் கொள்வதனையே இலங்கை அரசு விரும்புகின்றது எனக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’