பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அறிவித்திருந்தது. மேலும் அவருக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் நின்றுகொண்டிருக்கும்படி தண்டனையும் வழங்கியது. இதன் படி ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அவர் பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பளித்துள்ளது. கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, 'பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’