இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை. இதனால் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும்படி நான் வலியுறுத்துவேன். எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். மீன்பிடி நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன வீரகேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கியதால் உலகில் எந்தவொரு நாடும் பிளவுபட்டதாக சரித்திரத்தில் இல்லை. தனி நாடுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று சற்று இறங்கி வந்து ஐக்கிய நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொண்டுள்ளது. இதை நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் பிரதிநிதிகளும் வந்து இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன் வைக்கச் சந்தர்ப்பமுள்ளது. எனவே நாட்டின் அதி உயர்ந்த இடமான நாடாளுமன்றத்தில் காணப்படும் தீர்வுக்கு யாரும் சவால் விடுக்கவும் முடியாது. எனவே இந்த பொன்னான வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டும். இனப்பிரச்சினை இந்த நாட்டில் 60 வருடங்களாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும். முப்பது வருடங்களாக நாம் இந்தப் பிரச்சினைக்காக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டோம். யுத்தம் செய்தோம். பல உயிர்களை இழந்தோம். யுத்தம் முடிவுற்ற இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியம். ஏனைய நாடுகள் துரித கதியில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது நாம் இந்தப் பிரச்சினையால் பின்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த நிலை குறித்து அனைத்து கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’