வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 2 ஜூன், 2012

ஆயுள் சிறை செல்கிறார் எகிப்தின் முன்னாள் அதிபர் முபாரக்



கிப்தில் கடந்த ஆண்டு நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பித்த அரபுலக கிளர்ச்சியைத் தொடர்ந்து அங்கு நடந்த குற்றச்செயல்களுக்காக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது முன்னாள் அரச தலைவர் அதிபர் ஹொஸ்னி முபாரக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அல்-அத்லிக்கும் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மாருக்கு எதிராக தனியாகக் கொண்டுவரப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கில் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. ஹொஸ்னி முபாரக்குக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்ட செய்தி கேட்டு நீதிமன்றக் கட்டடத்துக்கு வெளியே மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறினார். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றமை தொடர்பில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட இன்னும் நான்கு பேருக்கு ( உள்துறை அமைச்சரின் சகாக்கள்) வி்டுதலை அளிக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். தீர்ப்பின்போது,'தேசத்தின் புதல்வர்கள் நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அமைதியாக கிளர்ந்தெழுந்தனர்' என்று சுட்டிக்காட்டிய நீதிபதி,' 30 ஆண்டுகால இருண்ட யுகம்' என்று முபாரக் ஆட்சியை வர்ணித்தார். அரசுக்கெதிரான மக்கள் கிளர்ச்சியின்போது, அரச படைகள் நிராயுதபாணிகளாக இருந்த பொதுமக்கள் மீது ஆயுத தாக்குதல்களை நடத்தியபோது, முன்னாள் அதிபர் முபாரக்கும் உள்துறை அமைச்சரும் அந்தத் தாக்குதல்களைத் தடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. 1981முதல் 2011 வரை எகிப்தை ஆண்ட ஹொஸ்னி முபாரக், ஆர்ப்பாட்டக்காரர்கள் 850 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’