இ லங்கை மண்ணை வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டிக்கான களமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை கூறியுள்ளது. 'எமது நாடும் நாட்டின் கடல் பரப்பும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கான களமாகாமல் இருப்பதை உறுதி செய்வதில் இலங்கை தீர்க்கமாக உள்ளது. எந்தவொரு நாடும் வேறு நாட்டின் மீது தாக்குதலை மேற்கொள்ள இலங்கையை ஆதாரத்தளமாகப் பயன்படுத்த நாம் ஒருபோதும் அனுமதியோம்' என புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தொன்றுதொட்டு உலக வல்லரசுகளின் பார்வையில் இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. கிழக்கு – மேற்கு கடல் வாணிபத்தில் இந்து சமுத்திரத்தின் பொருளாதார முக்கியத்துவமே இதற்கு காரணமாகும். இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை, வல்லரசுகளின் தந்திரோபாய மற்றும் ஊக செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்க முடியவில்லை. இவ்வாறான பிரச்சினை பற்றி நிபுணர் குழக்கள், அறிஞர்கள், மற்றும் ஊடகங்கள் தொடர்ந்தும் கருத்துரைத்தவாறு இருக்கின்றன. இலங்கையில் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அரசு எப்போதும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து வருகிறது. இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதியை பாதுகாப்பதில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. 30 வருடங்களாக பயங்கரவாதம் காரணமாக துன்பப்பட்ட நாம் யுத்தத்தின்போது நாடுகளும் மக்களும் படும் அவலத்தை கண்டுள்ளோம். எமது கொள்கைகள், நடைமுறைகள் காரணமாகவே நாம் சகல நாடுகளுடனும் விசேடமாக இப்பிராந்தியத்திலுள்ள இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடன் நட்புறவோடு உள்ளோம். இலங்கை, சர்வதேச நாடுகள் சமுதாயம் தொடர்பில் தனது பங்களிப்பை மிக சிறப்பாக வழங்கி வருகிறது. நாம் பல சர்வதேச ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளோம். நாம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சமநீதி என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஏனைய நாடுகளுடன் ஒத்துழைக்கின்றோம். இதை நாம் ஏனைய நாடுகளிலிருந்தும் சர்வதேச அரங்கின் முக்கியஸ்தர்களிடமிருந்தும் எதிர்ப்பார்க்கின்றோம்' என்று பிரசாத் காரியவசம் மேலும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’