இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் சிறார்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இலங்கையின் கரையோரங்களில் காணப்படும் சுற்றுலாத்துறைக்கான இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு சிறுமிகளை விட ஆண் சிறுவர்கள் அதிகம் வன்முறைக்கு உட்படுவதாக கடந்த செவ்வாயன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைவிட, இலங்கையில் உலர்வலயத்தில் உள்ள பண்ணைகளிலும், பெருந்தோட்டங்களிலும், உலர் மீன் பதனிடும் தொழிற்சாலைகளிலும் சிறுவர்கள் பலவந்தமாக தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் தொழிலாளிகளைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சிறார்கள் கொழும்பில் பலவந்தமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்கள் உடல், உள மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், இவர்களின் உழைப்புக்கு எந்தவொரு ஊதியமும் வழங்கப்படுவதில்லை எனவும், இந்தச் சிறார்கள் வேறிடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணிபுரியும் தாய்லாந்து, சீனா மற்றும் ஏனைய தென்னாசிய நாடுகள், ஐரோப்பா, முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகக் குறைந்த எண்ணிக்கையான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தலை நிறுத்துவதற்கான குறைந்த பட்ச நியமங்களை வரைந்து அதற்கேற்ப நகர்வுகளை மேற்கொள்வதில் தனது ஈடுபாட்டைக் காண்பிக்கவில்லை. இவ்வாண்டில் இலங்கை அரசாங்கமானது இவ்வாறான ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்ற எவரையும் கைதுசெய்யவில்லை. ஆட்கடத்தல்களால் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பாதிக்கப்படுகின்றவர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு தீவிர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இருந்தும் இலங்கை அரசாங்கமானது இவ்வாறான ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்ற இரு அமைப்புக்களை இனங்கண்டுள்ளதுடன், இது தொடர்பாக மாதம் தோறும் அமைச்சர்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சந்திப்புக்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆட்கடத்தற் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பயனுள்ள முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது" என இவ்வறிக்கையை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், 17 நாடுகள் தமது நாடுகளில் இடம்பெறும் ஆட்கடத்தல்களை எதிர்த்து எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 'ஆட்கடத்தலுக்கு' பதிலாக 'நவீன அடிமைத்தனம்' என்ற சொல்லைப் பயன்படுத்த தான் விரும்புவதாக இவ் அறிக்கை வெளியீடு செய்யும் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். "அடிமைத்தனம் என்பது தற்போது வேறுவிதமாக பரிணமித்துள்ளது என நான் கருதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் 'ஆட்கடத்தல்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியபோது வீதிப் பாதுகாப்பு தொடர்பாக நான் கூறுகிறேன் என மக்கள் நினைத்தனர். ஆனால் 'அடிமைத்தனம்' என்கின்ற வார்த்தை தொடர்பில் மக்கள் தவறான விளக்கப்பாட்டைக் கொண்டிருக்கமாட்டார்கள்" என கிலாரி கிளின்ரன் மேலும் தெரிவித்தார். அல்ஜீரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, ஜனநாயக குடியரசான கொங்கோ, கியூபா, ஈக்குவேற்றிரியல் கினியா, எரித்திரியா, ஈரான், வடகொரியா, குவைத், லிபியா, மடகஸ்கார், பப்புவா நியூ கினியா, சவுதி அரேபியா, செறினேம், சிரியா, ஜெமன், சிம்பாவே ஆகிய 17 நாடுகளில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மிக மோசமாக இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான வேறு சில நாடுகள், ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்கச் சட்டத்தை திருப்திப்படுத்தவில்லை எனினும், இந்நாடுகள் கணிசமான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’