வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மே, 2012

தமிழர்களுக்கு மட்டுமல்ல வடக்கு: கோட்டா



லங்கையின் இறுதிக்கட்ட போர் நடந்த வடக்கு பிரதேசம் தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த விடயத்தில் முக்கிய நபராக பலராலும் பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில் சிறிதளவு எண்ணிக்கையான ஆட்சேதங்களே ஏற்பட்டதாகவும் பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார். ஆனால், இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. போருக்கு பின்னர் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் என கூறப்படுவோரின் எண்ணிக்கை குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன ரீதியான பாகுபாடுகளின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய இயல்பு நிலை உருவாகி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய கூறினார். இதேவேளை, கடந்த திங்கட்கிழமை சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பற்றி கருத்துக் கூறவும் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துவிட்டார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த பிபிசியின் கொழும்பு செய்தியாளர் சார்ல்ஸ் ஹெவிலண்ட், "அண்மையில் வடக்கு சிவில் நிர்வாகத்திலுள்ள சில மூத்த தமிழ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் காரணம் என்ன" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த கோட்டாபய, "போருக்கு எல்லாம் முன்னர், அங்கிருந்த அதிகாரிகள் சிங்களவர்களாக தான் இருந்தார்கள். அதிகளவான தமிழ் அதிகாரிகள் தெற்கு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் பணியாற்ற முடியுமாக இருக்க வேண்டும். அது இலங்கையின் பாகம் தானே" என்றார். வடக்கு பிரதேசம் அங்கு செறிந்து வாழும் தமிழர்களுக்கே உரித்தான ஒரு பகுதி என்று தமிழர்கள் கருதுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹெவிலண்ட் வினவியதற்கு '"ஏன் அப்படி இருக்க வேண்டும், நீங்கள் இலங்கையர் என்றால் நாட்டின் எந்த இடத்திற்கும் சென்று சொத்துக்களை வாங்க முடியுமாக இருக்க வேண்டும். திட்டமிட்ட குடியேற்றத்தை பற்றி நான் பேசவில்லை. நாட்டின் எந்த இடத்திலும் வாழக்கூடிய சுதந்திரம் இலங்கையருக்கு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்" என்றார் கோட்டாபய ராஜபக்ஷ. தமிழர்கள் செறிவாக வாழும் பிராந்தியங்களுக்கு மாகாண அடிப்படையிலாவது கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த விடயத்தில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அரசாங்கமும் பெரும்பான்மை தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளும் இப்போது முட்டுக்கட்டை நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வடக்கில் நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், அண்மையில் இலங்கை அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின் படி 7,400 பேரே இறுதி போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த 7,400 பேரில் சிறிய எண்ணிக்கையானோரே பொதுமக்கள் என்றும் மற்றவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். "சில ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது நீங்கள் கூறும் எண்ணிக்கையாக இருக்க முடியாது. போரில் சட்ட மீறல்கள் நடந்திருந்தால் அதற்காக தண்டனை அளிக்க முடியும். ஆனால் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும்" என கோட்டாபய குறிப்பிட்டார். அப்பாவி பொதுமக்களை கொன்ற பயங்கரவாதிகளை இராணுவம் ஒழித்திருக்கிறது. இப்போது அவை எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. அது பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள். நீங்களும் பயங்கரவாதிகளின் நிலைப்பாட்டை தான் ஆதரிக்கிறீர்கள் என்றும் பிபிசியின் செய்தியாளரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’