வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 மே, 2012

இதுவரை கால எமது மக்களின் உயிரிழப்புகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது வாழ்கின்ற மக்களுக்கான அரசியலுரிமையை வென்றெடுப்பதேயாகும்.


டந்த கால கொடிய யுத்தத்தின் போது உயிரிழந்து போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கான அரசியலுரிமைகளை வென்றெடுப்பதேயாகும் என்றும் நடந்து முடிந்த அழிவுகளில் இருந்து எமது மக்கள் நிமிர்ந்தெழ இதுவே அவசியத்தேவை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் பேசும் மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் சந்தித்திருப்பது முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல. அதற்கு முன்னராகவே நீண்ட காலமாக எமது மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். ஆரம்பகால ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனக்கலவரங்களும் தனிமனித உயிர்வாழ்வுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சூழலும் ஒரு உரிமைப்போராட்டத்திற்கான தேவையை அன்று எமக்கு வலியுறுத்தியிருந்தது. அந்த உரிமைப்போராட்டத்தில் நாமும் அன்று முன்னணிப்பாத்திரமேற்று பங்கெடுத்திருந்தவர்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்களில் பலரும் அன்று உணர்ச்சி பொங்க பேசி எமது இளைஞர், யுவதிகளை வீதிக்கு இழுத்தார்கள். அவர்களது நடைமுறைக்கு சாத்தியமற்ற வெறும் சுயலாப உணர்ச்சி பேச்சுக்களை நம்பி வீதிக்கு வந்த எமது மக்கள் நடுத்தெருவில் நிற்க தனிநாடு கேட்ட அவர்கள் தமது குடும்பங்களோடு தப்பியோடிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடுகள் பெற்று சொகுசாக வாழ்ந்தார்கள். அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வருமாறு போலி முழக்கமிட்டு அழைத்தவர்கள் உரிமைப்போராட்டத்தில் வியர்வை கூட சிந்தாமல் கட்டிய வேட்டி கூட பிசங்காமல் ஓடித்தப்பி விட்டனர். ஆனாலும் நாம் எமது மக்களின் நீடித்த பாதுகாப்புக்காகவும், நிரந்தர அரசியலுரிமைக்காக்கவும் நீதியானதொரு உரிமைப்போராட்டத்தை எமது மண்ணில் நின்று நடத்தியிருந்தோம். ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் ஒரே இலட்சியத்திற்காக உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்மத்தியில் தோன்றிய தனித்தலைமை வெறி என்பது எமது மண்ணை சகோதரப்படுகொலை களமாக மாற்றியிருந்ததால் எமது நீதியான உரிமைப்போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்றது. அழிவுகளும், அவலங்களும் மட்டுமே எமது மக்களுக்கு மிஞ்சியிருந்தன. உட்பகை வேரறுக்கும் என்பது போல் எமது ஒற்றுமையீனம் என்பது எமது மக்களை கருவறுக்கத் தொடங்கியது. அந்த சூழலிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. எமது மக்களை அழிவுகளில் இருந்து மீட்கவும் எமது அரசியலுரிமைகளை நோக்கி நாம் செல்வதற்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் அரியதொரு வாய்ப்பாகவே இருந்தது. ஆனாலும், அதை அன்று ஒரு பகுதியினர் ஏற்கவும் இல்லை. ஏற்றுக்கொண்ட இன்னொரு பகுதியினர் சரிவரப் பயன்படுத்தவும் இல்லை. அவ்வாறு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டும் சரிவரப்பயன்படுத்தியும் இருந்திருந்தால் அதற்கு பின்னரான எமது மக்களின் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அன்று முதல் இறுதியில் நடந்த முள்ளிவாய்க்கால் வரையிலான அழிவுகளும், இங்கு நடந்திருக்காது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா குமாரணதுங்க புலிகள் பேச்சு வார்த்தை மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் பேச்சு வார்த்தை இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகள் பேச்சு வார்த்தை எனத் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களும் எமக்கு கனிந்து வந்திருந்தன. ஆனாலும் யுத்தத்தின் மூலமே எதையும் பெறுவோம் என்ற தீர்க்கதரிசனமற்ற எண்ணங்களும் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு ஆதரவளித்த சுயலாப அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற செயலும் எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்று அழிவுகளை மட்டுமே இங்கு பெற்றுத் தந்திருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பி யினராகிய நாம் பங்கெடுக்கும் உரிமை என்பது சக தமிழ் தலைமைகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் அதை நாம் கொள்கை ரீதியாக மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள். நாம் உட்பட, சகல விடுதலை அமைப்புகளினதும் இரத்தம் சிந்திய அர்ப்பணங்களால் உருவாக்கப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். எமது உரிமைப்போராட்டத்திற்கு இதுவரை கிடைத்த வெற்றி என்பது அது ஒன்று மட்டுமே. ஆகவேதான் ஆரம்பத்தில் இருந்தே நாம் அழிவு யுத்தம் வேண்டாம் என்றும், அமைதிப்பேச்சின் மூலமே எமது மக்களின் அரியலுரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் நாம் வலியுறுத்தி அதற்காக நடைமுறையில் உழைத்தும் வந்திருக்கின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய அரசுகளின் குணாம்சம் வேறு. அதற்கு பிந்திய அரசுகளின் குணாம்சம் வேறு. இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய இலங்கை அரசுகள் அரசியல் தீர்வுக்கு உடன் பட்டு வந்திருந்த போதும் மாறி வரும் உலகத்தின் போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் உடன்பட்டு வந்திருக்கவில்லை. இவ்வாறு நாம் கூறுவது சுயலாப தமிழ்த் தலைமைகளின் பார்வையில் பொய்யானதாக இருந்திருந்தால் அவர்கள் அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பது என்பது உண்மையானதாக இருந்திருந்தால் அதற்கான தமது மனவிருப்பங்களை நடை முறையில் வெளிப்படுத்தி நாம் போராடுவதும் வாதாடுவதம் நீதியானதொரு அரசியலுரிமைக்காகவே என்பதை சர்வதேச சமூகத்தின் முன்பாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இவர்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலுமே எமது உரிமை போராட்டம் என்பது பயங்கரவாத செயற்பாடுகளாக உலக அரங்கில் அடையாளப்படுத்தப்பட்டது. இதுவே எமது மக்கள் அழியும் போதும் அவலப்படும் போதும் சர்வதேச சமூகம் அதை தட்டி கேட்க விருப்பமின்றி கை கட்டி நின்றது என்று சுயலாப அரசியல் தலைமைகள் நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு காரணமான விடயமாகும். சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்று தவறுகளால் எமது மக்கள் அழிந்தும் அவலப்பட்டும் இடம்பெயர்ந்தும் நிலமிழந்தும் சொத்திழந்தும் அலைந்து திரிய வேண்டிய துயரங்கள் இங்கு நடந்தன. ஆகவே, கடந்து போன வரலாற்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டு இனியொரு அழிவுக்குள் எமது மக்களை தள்ளி விடாமல் புது விதி படைப்பதற்கு தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைப்பதற்கு முன்வரவேண்டும். வெறும் சுயலாபங்களுக்கான அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்கள் எதையும் எமக்கு பெற்றுத்தராது. மாறாக அழிவுகளை மட்டுமே பெற்றுத்தரும் என்பது அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்களாகும். ஆகவே, சாணக்கிய தந்திரங்களும் மதிநுட்ப சிந்தனைகளும் எமது மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டும். எதுவாக இருப்பினும் இதுவரைகால அழிவு யுத்தத்தின் போது உயிரிழந்து போன அனைத்து மக்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகின்றோம். இவர்களது இழப்புகளால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுடனும் எமது துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம். அந்த மரியாதைகளுக்காகவே சமாதனம் வளமான தேசம் அரசியலுரிமை சுதந்திரம் குறித்த உயிரிழந்தவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடந்து முடிந்த அழிவுகளையும் அவலங்களையும் வைத்து அர்த்தமற்ற வகையில் பகைமையுணர்வை வளர்க்காமல்: அப்பாவி மக்களின் இழப்புகளை வைத்து அரசியல் சுயலாபம் தோடாமல் எமது மக்களை நிம்மதியாகவும் சுதந்திர பிரஜைகளாகவும் எமது மண்ணில் வாழவைப்பதை பிரதான நோக்காகக் கொண்டு அனைத்து தமிழ்த் தலைமைகளும் ஆக்க பூர்வமாக உழைக்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’