வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 மே, 2012

கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரம் பேரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை: பவ்ரல்



போர் நடைபெற்ற பிரதேசமாகிய கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளவர்களில் 23 ஆயிரம் பேரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. தேசிய அடையாள அட்டை என்பது அதி முக்கியமான தனி நபருக்குரிய ஆவணமாகும். எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அதன் ஊடாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டவர்கள் எதுவிதமான தடைகளுமின்றி தமது தேசிய அடையாளஅட்டையின் மூலம் தம்மை அடையாளப்படுத்தி இலகுவாக வாக்களிப்பதற்கு வழி செய்வதற்குமாகவே தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவையை நாங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துகின்றோம் என்று நீதியும் சுதந்திரமுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பாகிய பவ்ரல் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அடிப்படை விடயங்களையும் அதனைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களையும் தெளிவுபடுத்தும் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தச் சூழல் காரணமாகவும் இடப்பெயர்வு காரணமாகவும் அத்துடன் வேறு பல காரணங்களினாலும் பலர் தமது தேசிய அடையாள அட்டையை இழந்திருக்கின்றார்கள். பலருடைய அடையாள அட்டைகள் பழுதடைந்திருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக இன்னும் சிலருடைய பிறப்பு உரிய முறையில் பதிவு செய்யப்படாத காரணத்தினாலும் பிறப்புச் சான்றிதழ்களை தொலைத்துவிட்டு அதன் இணைப்பிரதியைப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினாலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலைமையை மாற்றி அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனை பெற்றுக்கொடுப்பதற்கு உதவி செய்யும் வகையிலேயே எமது அமைப்பாகிய பவ்ரல் அமைப்பு இத்தகைய நடமாடும் சேவையை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் மற்றும் டி.ஆர்.சி. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் உதவியோடு நடத்தி வருகிறது. இந்த நடமாடும் சேவையின்போது தொலைந்து போன அல்லது எடுக்க முடியாதுள்ள பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய செயல் முறைகளில் மக்களை வழிப்படுத்தி உதவி வருகின்றோம். இவ்வாறு பிறப்புப் பதிவுப் பத்திரம் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளைச் செய்த அதனைப் பெற்றுக் கொண்டதும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்வதற்குரிய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் குறிப்பாக பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். புனர்வாழ்வு நடவடிக்கைகள், வாழ்வாதாரச் செயற்பாடுகள் என்பவற்றில் அவர்கள் தமக்குரிய உதவிகளை, தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கு தம்மை அடையாளப்டுத்துவதற்காக வேறு அடையாள அட்டைகளுக்காக அலைய வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இத்தகைய நிலைமையை முற்று முழுதாக மாற்ற முடியாவிட்டாலும் முடிந்த அளவில் அதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம் என்றார். பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றதைப் போன்ற தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை கண்டõவளை பிரதேச செயலகத்திலும் நேற்று புதன்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’