வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஏப்ரல், 2012

தமிழினம் தலைநிமிர்ந்து வாழ உடல்,பொருள், ஆவி அனைத்தையும் தருவேன்: கருணாநிதி



லங்கையில் தமிழினம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டேன்' என்று தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது இன்றைக்கு தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கே தெரியும். இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள். சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட, அந்த அணிகளிடையே இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை. அதன் காரணமாக ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை. வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும் காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங்கூட அந்த இனத்திற்கு இலங்கையில், தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது நிரந்தரமானதல்ல என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு - நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; இலங்கைத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்' என்று அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’