தேமுதிக வென்ற 29 தொகுதிகளிலும் மக்களிடம் குறை கேட்கும் வேலையில் இறங்கியுள்ளார் அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த். சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள விஜய்காந்த்,
சஸ்பெண்ட் காலம் முடிந்த பின்னரும் சட்டசபைக்குச் செல்லவில்லை. மாறாக தேமுதிக வென்ற 29 தொகுதிகளுக்கும் சென்று மக்களிடம் குறை கேட்க முடிவு செய்துள்ளார். இதனால், அரசு கலக்கமடைந்துள்ளது. (இன்று சட்டசபையில், விஜய்காந்த் அஞ்சா நெஞ்சன் என்றால் ஏன் அவைக்கு வருவதில்லை என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது) சில தினங்களுக்கு முன் தான் வென்ற ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்றிரவு திடீரென கோவை வந்தார். இன்று காலை கோவை ஜென்னி ரெசிடன்சியில் இருந்து புறப்பட்ட அவர் 11 மணியளவில் கருமத்தம்பட்டி நால் ரோடு வந்தார். வேனில் இருந்து இறங்கிய விஜயகாந்த் பொதுமக்களிடம் குறை கேட்பதற்காக போடப்பட்டிருந்த மேடைக்குச் சென்றார். அங்கு அவரிடம் ஏராளமான பொது மக்கள் மனுக்களைக் கொடுத்தனர். அங்கு பேசிய விஜய்காந்த், இந்தப் பகுதியில் உள்ள விசைத்தறி தொழில் பிரச்சனை குறித்து நன்கு அறிவேன். பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் பலவற்றில் குடி தண்ணீர் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய சொந்த செலவில் எம்.எல்.ஏ. தினகரன் மூலமாக இந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். பின்னர் வேறு பகுதிகளில் குறை கேட்கக் கிளம்பிச் சென்றார். சட்டசபை-தி.மு.க புறக்கணிப்பு: இந் நிலையில் சட்டசபையில் திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலு, செளந்தரபாண்டியன், கம்பம் ராமகிருஷ்ணன், மைதீன் கான் ஆகிய 4 பேரும் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யபட்டதை கண்டித்து திமு.க உறுப்பினர்கள் இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’