வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஏப்ரல், 2012

'இடம்பெயர் மக்களின் சொந்த இடங்களில் நிரந்த இராணுவ முகாம் அமைப்பதால் அவர்களை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டும்'



யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் சொந்த இடங்களில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதால் அம்மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் முகமாக வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு இன்று புதன்கிழமை வருகைதந்த மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'செட்டிகுளம் பிரதேசத்தில் 2 நலன்புரி நிலையங்களை நாம் தற்போது பேணி வருகின்றோம். இந்த நலன்புரி நிலையங்களில் 1,600 குடும்பங்களைச் சேர்ந்த 6022 பேர் வசித்து வருகின்றனர். இவர்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இவர்களில் அனைவருமே முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கண்ணிவெடி அகற்ற வேண்டிய பகுதிகளில் அவற்றை அகற்றி இடம்பெயர் மக்களை கட்டம் கட்டமாக குடியேற்றி வருகின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவ வீரர்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு அப்பகுதி பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்பகுதி மக்களிடம் முற்றுமுழுதாக கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்ற மக்களின் சொந்த இடங்களில் நநிரந்தரமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், அம்மக்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய தேவையுள்ளது. இம்மக்களுக்கு கோம்பாவில் பிரதேசத்தில் உள்ள மிகவும் வளமான பிரதேசங்களை தெரிவுசெய்து தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுடன் 40 பேர்ச் காணியும் விவசாயம் செய்தவற்காக 40 பேர்ச் காணியும் வழங்கி அவர்களை குடியேற்றி வருகின்றோம். அத்துடன், இம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், விவசாய உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம். விரைவாக மீள்குடியேற்றத்தை முடிக்குமாறு ஜனாதிபதி பணித்திருக்கின்ற நிலையில், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து மீள்குடியேற்ற அமைச்சரும் நானும் மேற்கொண்டு வருகின்றோம். நலன்புரி நிலையத்திற்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். ஏனெனில் தமிழ்நாட்டில் இலங்கையைப் பற்றி தவறான எண்ணங்கள் காணப்படுகின்றன. மக்களை மீள்குடியேற்றுவதில்லை. மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றோம் என்ற எண்ணங்கள் அங்கு காணப்படுகின்றன. இங்குள்ள நிலைமையை அவர்கள் வந்து பார்க்கின்றபோது உண்மை புலப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’