ரஷ்யாவின் பிரதமராக கடந்த நான்கு வருடங்களாக பதவி வகித்த விளாடிமிர் புட்டின் மூன்றாவது தடவையாகவும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் விளாடிமிர் புட்டின் 60 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒளிவுமறைவில்லாத நேர்மையான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக மொஸ்கோவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் விளாடிமிர் புட்டின் கூறினார். தற்போதைய ஜனாதிபதியான திமித்திரி மெத்வதேவுடன் தோன்றிய விளாடிமிர் புட்டின், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். இதேவேளை, விளாடிமிர் புட்டினின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அவரது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ரஷ்ய நாட்டு தேசியக்கொடி மற்றும் பதாகைகளுடன் கிரம்ளினுக்கு வெளியே ஒன்றுகூடினர். இந்த தேர்தலின்போது பாரியளவில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஒருவர் பல தடவைகள் வாக்களித்துள்ளதாக மொஸ்கோவில் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், எதிர்க்கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். கிரம்ளின் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 6,000 பொலிஸார் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’