நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமற்றதாகும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லுறவு தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததோடு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வரவுள்ளது. இப்பரிந்துரைகளில் பல விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்தியாவும் சர்வதேசமும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறே வலியுறுத்துகின்றன. நாமும் ஒரே குரலில் இதனையே வலியுறுத்துகிறோம். எனவே அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா எதிர்க்கும். இலங்கைக்கு ஆதரவு வழங்கும். அதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அடிப்படைவாதச் சக்திகள் அரசாங்கத்திற்குள்ளும் உள்ளன. அவர்களுக்குத் தற்போதைய நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டு, அவர்களை அரவணைத்துக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. ஜனாதிபதியினால் அதனை மேற்கொள்ள முடியும். நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் இனவாதத்திற்கு துணை போகத் தயாரில்லை. அரசாங்கமும் இதற்கு ஒருபோதும் இடமளிக்காது" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’