ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இந்தவாரம் இடம் பெறவுள்ள இலங்கைமீதான வாக்களிப்பு, இனப்போருக்குப் பின்னும் தமது நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்துவரும் அப்பாவி தமிழ் மக்களின் இதய துடிப்பாக அமையவுள்ளது.
இந்தியாவின், 'நிபந்தனைக்குட்பட்ட' ஆதரவை தற்போது பெற்றுள்ள, 'போர்க்குற்றங்களுக்கான உத்தரவாதம்' குறித்த அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், ஏன் - பின்வாங்கப்பட்டாலும், அதன் தாக்கம், இலங்கைவாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். ஜெனிவா வாக்கெடுப்பால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், அவர்கள் சொல்-பேச்சு கேட்டுநடப்பதுபோல் தோன்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் எழாது. முதலாமவர்கள், கண்காணாத தேசங்களில், தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருந்து இலங்கை தமிழ் அரசியலின் போக்கை தொடர்ந்து வழிநடாத்திவருபவர்கள். பின்னவர்கள், இந்தியாவிலும் இன்ன பிற நாடுகளிலும் இன்னமும் தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு கொம்புசீவி அரசியல் செய்பவர்கள். இந்த கவலைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஜெனிவா வாக்கெடுப்பில் இலங்கை வெற்றிபெற்றாலும் அல்லது தோல்வியை தழுவினாலும், இலங்கை அரசின் நிலையிலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் கண்களிலும் அதற்கான 'பழிச் சொல்' தமிழினத்தையே வந்தடையும். அப்போது, காரண காரியங்களுக்கும், நியாய - அநியாயங்களுக்கும் இடம் இருக்காது. இது ஏதோ எதிர்கால குற்றங்களை தற்காலத்திலேயே நியாயப்படுத்துவது போலக் கூட தோன்றலாம். ஆனால், இனப் பிரச்சினையின் சரித்திரம் புகட்டும் பாடம் இது தான்.
அதுமட்டும் அல்ல. ஒருகட்டத்திற்குமேல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழர்-ஆதரவு அரசியலும் வன்முறையும் கூட, தனக்கு என்று ஏதோ ஒரு நியாயத்தை கற்பித்துக் கொண்டது. அதற்கு என்று ஒரு தர்மத்தையும் தமிழ் மக்களுக்கு போதித்தது. இவற்றை மட்டுமே நிலைநிறுத்துவதற்கும் அப்பால் சென்று, தனக்கு என்று ஓர் உத்வேகத்தையும் செயற்பாட்டையும் போகிற வழியில் அது பெற்றுக்கொண்டது. தானே நிர்மாணித்த இந்த 'சக்கரவியூக'த்தில் மாட்டிக் கொண்ட விடுதலைபுலிகள் இயக்கத்தால் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை என்பதே உண்மை.
இதனால் பாழ்பட்டது இலங்கைவாழ் தமிழர் வாழ்வும் அவரது உயிரும், உடமையும் தான். இதன் காரணமாக இன்றளவும் அல்லல்படுவதும் அவர்கள் தான். ஆலை ஓய்ந்தாலும் மழை ஒயவில்லை என்றளவில், இனப்போர் முடிந்த சுமார் மூன்றாண்டுகளுக்கு பின்னரும், ஏன் எதிர்வரும் எத்தனையோ தசாப்தங்களிலும் பாதிப்புநிலையில் இருந்து முழுவதும் மீளாதவராக இருக்கப்போவதும் அவர்கள் தான்.
இப்போதைய வாக்களிப்பின் தாக்கத்தால் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நேரடியாக அதிக பாதிப்புகளுக்கு ஆளாகப்போவதில்லை. உண்மை என்னவோ, இன்றளவும் அவர்களில் பலரது உறவினரும் நண்பர்களும் இன்னமும் இலங்கையில் தான் வாழ்ந்துவருகிறார்கள். மீண்டும் இலங்கையில் இனப் பிரச்சினை ஏதாவது விதத்தில் தலை எடுக்காத பட்சத்தில், அரசியல் காரணங்களை காட்டி பிறநாடுகளில் அவர்களில் யாரும் 'புகலிடம்' கோரமுடியாது. அவர்கள் செல்ல விரும்பும் மேலை நாடுகளும், எண்பதுகள் போல் அல்லாமல், இனப்போர் முடிந்துள்ள தற்போதைய அரசியல் புகலிடம் கோரும் இலங்கை தமிழ் மக்களை ஆதரவுக் கரம் நீட்டி அரவணைப்பார்கள் என்று எண்ண இடம் இல்லை.
பின்னர் ஏன் இந்த முன்னெடுப்பு? கடந்த தசாப்தங்களில் சில ஐரோப்பிய நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்கள். அந்தபுலம் பெயர்ந்த தமிழர்களால் கடந்து வந்த பாதையை மறக்க முடியவில்லை. நூற்றாண்டு காலங்களாக வாழ்ந்து, வளர்ந்து, செழித்துவந்த சொந்தநாட்டில் அவர்களது முந்தைய தலைமுறையினர் ஐம்பதுகளிலும் அவர்களில் பலர் எண்பதுகளிலும் கண்டு, கேட்டு, அனுபவித்த அவலங்கள், இன்னல்கள் அவர்களை எஃகு மனிதர்களாக மாற்றிவிட்டது. மேலைநாடுகளில் பிறந்து, வளர்ந்த அவர்களது இளைய சமுதாயமோ, இனப் போரின் இறுதி மாதங்களில் பாலபாடம் படித்து வளர்ந்துள்ளார்கள்.
அவர்களது முறைகளும் முறையீடுகளும் சரியா, தவறா என்பதல்ல பிரச்சினை. சரியானாலும் தவறானாலும், அதனை தங்களுக்குள்ளாகவே நியாயப்படுத்தி முன் செல்லும் வகையில் சிந்தித்து செயல்படுபவர்கள். அவர்களை பொறுத்தவரையில், 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அடைந்த போர்த் தோல்வி இனப் பிரச்சினைக்கோ அல்லது இனப்போராட்டத்திற்கோ முன்னுரை என்று இல்லை என்றாலும்;, அது முடிவுரையும் அல்ல. மஹாபாரத கதையில் கூறப்படுவதுபோல் தூரத்தில் உள்ள மரத்தின் கிளையில் இளைப்பாறும் கிளியின் கழுத்துமட்டுமே கண்ணில் படும் வில் வீரர்கள்.
அவர்களுக்கு, இலங்கையில் இல்லலுறும் தமிழ் மக்களின் பாதுகாப்பைவிட தங்களது 'தனிநாடு' கொள்கையும் அதுசார்ந்த சர்வதேச அரசியலுமே தற்போது கண்ணில்படுகிறது. அவலங்களையும் ஆயுதமாக மாற்றி செயல்பட்டுவந்த அவர்களுக்கு, சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு மாய்ந்துபோனதாக கருதப்பட்ட திட்டங்களையும் செயல்பாடுகளையும் மீண்டெடுத்து உயிர்ப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
இவர்களில் பலரும் இலங்கைவாழ் தமிழர்களை பற்றி முறையான விதத்தில் கவலைப் படுவதைவிட, அவர்களின் தற்போதைய நிலைமையை காரணம் காட்டி இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நெருக்கடி கொடுப்பதில் ஆத்ம திருப்தி காண்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளையும் வழிமுறைகளையும்; இன்னமும் ஏற்றுக்கொள்பவர்கள். அண்மையில் இருந்துகொண்டே அவர்களில் மூன்று இலட்சம் பேரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 'மனித கேடயமாக' பயன்படுத்தியிருந்தால், அப்பால் இருந்து அதே மக்களை தங்களது தொடரும் கொள்கைகளுக்கும் வழிமுறைகளுக்கும் கேடயமாக பயன்படுத்த தயங்காதவர்கள்.
ஜெனிவா வாக்கெடுப்பில் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறுமானால், அந்த தோல்வியை இலங்கை அரசால் ஜீரணித்துக் கொண்டு, செயல்படமுடியுமா என்பது தெரியவில்லை. வெளிஉலகின் புகார்களுக்கும் அப்பாற்பட்டு போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு அரசும் சரி, இராணுவத்தினரும் சரி, பல்வேறு புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்கிறார்களோ இல்லையோ, அதிகார பரவலாக்கும் திட்டம் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியாவது வந்தார்கள்.
ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பின்னர் இலங்கை அரசின் இந்த திட்டங்களில் சுணக்கம் ஏற்படலாம். அந்த திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற ஆட்சியாளர்கள் விரக்தி அடையலாம். அதேசமயத்தில் அவர்கள் மத்தியில் உள்ள 'சிங்கள பேரினவாதிகள்' தங்களது நிலைப்பாட்டை ஒட்டுமொத்த தமிழினமும் நியாயப்படுத்திவிட்டதாக மிதவாதிகளை மட்டம் தட்டலாம்.
வாக்களிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தமிழர்கள் மத்தியில் காணப்படும் தீவிரவாத கொள்கை உள்ளவர்களும் சிங்கள பேரினவாதிகளின் எண்ணங்களுக்கு தூபம் போடும் வகையில் வேண்டுமென்றே செயல்படலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றி கோஷங்கள் சிங்கள பேரினவாதிகள் காதில் நாரசமாய் பாயலாம். இதன் தாக்கமே பின்னர் தமிழ் இளைஞர்கள் மிதவாத போக்கைவிட்டு மீண்டும் செயல்படுவதற்கான நியாயமாக கூட பயன்படுத்தப் படலாம்.
வாக்கெடுப்பில் அமெரிக்கா தோல்வியை தழுவி, இலங்கை வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகுமேயானால், அதுவே அரசிற்கு உள்ளும் புறமும் சிங்கள பேரினவாதிகளுக்கு ஊக்க மாத்திரையாக அமையும். புலம்பெயர்ந்த தமிழரும் தங்களது இனம் மீண்டும் சர்வதேச சமூகத்தால் ஏமாற்றப்பட்டுவிட்டது என்று கூறி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின், தன் கையே தனக்கு உதவி என்ற நிலைப்பாட்டினை முழுவதுமாக கையிலெடுத்து, தீவிரமாக செயல்படலாம். இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே உள்ள அவர்களது ஆதரவாளர்கள் தமிழ் அரசியலில் மிதவாதிகளை முற்றிலுமாக பின் தள்ளிவிட்டு, தலைமை பொறுப்புகளை பறித்து எடுத்துக் கொள்ளலாம்.
இதில் எதுவுமே முன்னால் நடந்திராதது அல்ல. கடந்த முப்பது ஆண்டு காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னிறுத்தி தமிழ் அரசியலும் ஆயுதப் போராட்டமும் செயல்பட தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே இது தான் நடந்துவந்துள்ளது. இதில் எது நடந்தாலும், எப்போது நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் இலங்கை வாழ் தமிழர்கள் தான். அதன் தாக்கத்தை உணர்ந்து தானோ என்னவோ, தலைநகர் கொழும்பில் உள்ள சில தமிழ் வியாபாரிகள் அரசு ஆதரவு ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். அது அவர்களது ஆதரவைவிட அச்சத்தின் வெளிப்பாடு என்றே காணப்படவேண்டும்.
எது எப்படியோ, ஜெனிவா வாக்களிப்பு வந்தாலும் வந்தது, இலங்கைவாழ் தமிழினம் காணாமல் போய், கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி பெற்றுவந்த நிம்மதியையும் தூக்கத்தையும் இப்போதே மீண்டும் தொலைத்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்தகால குற்றங்களின் பெயரால் இலங்கை அரசை தண்டிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளால் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தங்களது எதிர்காலத்தையும் மீண்டும் தொலைத்துவிட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’