வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 31 மார்ச், 2012

சகல தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்களிப்பு செய்வதன் மூலமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கல தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்களிப்பு செய்வதன் மூலமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்திற்கு கடந்த வியாழக்கிழமை (29.03.2012) விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்றப் பிரபுக்கள் சபை உறுப்பினரும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வகட்சி இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் பிரிவி கவுன்சில் உறுப்பினருமான நெஸ்பி பிரபு உள்ளிட்ட குழுவினருடனான விசேட சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவ்வாறு சகல தரப்பினருடனும் இணக்கப்பாடு காணாமையே கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததற்கு காரணமாகுமெனவும் குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதனை தொடர்ந்து நடைமுறைக்கு வந்த 13வது திருத்தச் சட்டமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருப்பதற்கும் இதுவும் ஒர் முக்கிய காரணமாகுமெனவும் அமைச்சர் அவர்கள் விளக்கினார். இறுதியுத்தத்தில் புலிகள் வடக்கு கிழக்கு பகுதி மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தமையால் பாரிய அழிவுகள் ஏற்பட்டதாகவும் அவ்வாறாக மக்களை பயணக்கைதிகளாக வைத்திருந்தமைமையை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். தற்போது அரசினால் வடகிழக்குப் பகுதிகளில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் மீள்குடியேறும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் முக்கியமாக நிரந்தர வதிவிட தேவைகளின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளினது விடுதலை மற்றும் அவர்களை சமூகத்தில் இணைப்பது தொடர்பில் அரசு காட்டி வரும் அக்கறை தொடர்பாகவும் கண்ணிவெடியகற்றல் மீள்குடியேற்றப் பகுதிகளில் இடம்பெற்று வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக எடுத்து விளக்கியதுடன் தென்பகுதியின் நிலவும் ஜனநாயக சூழல் போன்றதான ஒர் சூழலே வடபகுதியிலும் இருக்க வேண்டுமெனவும் இதற்காக தான் உறுதியுடன் உழைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக எதிர்காலத்தில் வடபகுதியில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்பவை இருக்க முடியாது எனவும் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்தி பாதுகாப்புக்கென மட்டுமே படையினர் நிலை கொண்டிருக்கும் சூழலொன்றை உருவாக்குதே எமது நோக்கமெனவும் தெரிவித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரிந்துரைகள் ஏற்கனவே ஈ.பி.டி.பியினால் முனமொழியப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களையே உள்ளடக்கியுள்ளதாகவும் ஆனாலும் அவ் ஆணைக்குழு தமது பரிந்துரையில் தனது சாட்சியத்தில் கூறப்படாத விடயங்களை ஆதாரபூர்வமாக குறிப்பிட்டு தன்மேல் குற்றம்சுமத்தியுள்ளதையும் அவர்களுக்கு தமது சாட்சிய பதிவேட்டை ஆதாரமாக காட்டி விளக்கினார். எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அவர்கள் தடைசெய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதனால் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் எமது மீனவர்களது மீன்பிடி உபகரணங்கள் பலத்த சேதத்திற்குள்ளவதாகவும் இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலின் போது இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் தாம் அவதானித்து வருவதாகவும் இதன்பிரகாரம் இங்கு வருகைதந்துள்ள தாம் பல்வேறு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து வருவதாகவும் வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் அதேவேளை இங்கு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரித்தானியப் பிரதிநிதி தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் பிரித்தானியப் பிரதிநிதியின் துணைவியார் இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரின் இணைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’