தமிழர் விவகாரம் மற்றும் தேசிய தீர்வு விடயங்களில் அரசாங்கத்தின் இதுவரை கால நிலைப்பாட்டினை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதனால் உருவாகியுள்ள சர்வதேசத்தின் இறுக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் இலங்கை அரசு இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியினால் நூறு வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் அதன் பரிந்துரை நிறைவேற்றியிருந்தால் உலக நாடுகளிடத்தில் மன்றாடிக் கொண்டிருக்கும் தேவை ஏற்பட்டிருக்காது என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது. ஜெனீவா பேரவையில் ஆதரவினைத் திரட்டிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐ.தே.க. வின் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் நூறு வீதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எனினும் மேற்படி ஆணைக்குழுவானது அரசாங்கத்தினால் அதுவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தாகும். எனவே இக்குழுவின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் அரசாங்கத்தினுடையவையாகும். அரசாங்கத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கே உரியதாகும். ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவை எந்தவொரு எதிர்க்கட்சியும் நியமிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான உறுப்பினர்களும் அதில் இல்லை. அந்த வகையில் இதனை நல்லிணக்க ஆணைக்குழு என்று பெயரிடுவதை விட அரச ஆணைக்குழு என்று அழைப்பதே பொருந்தும். தமிழர் விவகாரம் உள்ளிட்ட தேசிய பிரச்சினைக்கு மேற்படி ஆணைக்குழுவே தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான பாதையைத் திறக்கப்போவதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு கூறிவந்தது. குறித்த அறிக்கையும் பரிந்துரைகளும் வெளிவந்ததன் பின்னால் அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் வலியுறுத்தி வந்தோம். சர்வதேச சமூகமும் இதனையே கூறியது. எனினும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கமோ தேவைப்பாடோ அரசாங்கத்திடம் காணப்படவில்லை. அதனாலேயே இன்று வரையில் அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றி வந்த அரசாங்கம் இன்று ஜெனீவா பேரவையினூடாக சர்வதேசத்தின் பிடிக்குள் இறுக்கிக் கொண்டிருக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இதய சுத்தியுடன் அரசு செயற்பட்டிருக்குமேயானால் இன்று சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் நிலையோ அல்லது உலக நாடுகளுக்கு ஓடித்திரிந்து ஆதரவு திரட்டுவதற்காக கெஞ்சிக் கொண்டிருக்கும் தேவையோ ஏற்பட்டிருக்காது. இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. அதனை எவராலும் மறுக்க முடியாது. யுத்தம் நிறைவடைந்து விட்டதால் பிரச்சினை முடிந்து விட்டதாக அரச உயர் அதிகாரிகள் கூறுவார்களேயானால் அவர்கள் அரசியல் ஞானமற்றவர்களுக்கே ஒப்பானவர்களாவர். தற்போது சர்வதேச நீதிமன்றம் மின்சாரக் கதிரை என்ற பிரசாரமெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற போலியான மிகைப்படுத்தல்களாகும். அரசாங்கத்தின் பிரசாரங்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இது வரை கால ஏமாற்றுக்கள் அத்துடன் சர்வதேசத்துக்கு வழங்கி வந்த உறுதி மொழிகள் ஆகிய அனைத்திலும் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. எனவே இனியும் இலங்கை அரசாங்கம் சர்வ தேசத்திடமிருந்து தப்பிவிட முடியாது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பேரவையை ஒரு பேயாட்ட சபை என்ற வகையில் வர்ணிக்கவே அரசாங்கம் முற்பட்டது. உண்மையில் எமது நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்பட்டிருந்தால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அத்துடன் தேசிய பிரச்சினைக்கான தீர்வு காணலை நோக்கி பயணித்திருந்தால் மனித உரிமைகள் பேரவை பேயாட்ட சபையாக தெரிந்திருக்க மாட்டாது. சர்வதேசத்தின் நெருக்கு வாரமும் ஏற்பட்டிருக்காது. ஆகையால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான பேரவையின் வலியுறுத்தலை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும். உள்நாட்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயம் அரசாங்கத்தின் தவறான கொள்கையால் சர்வதேசத்தின் அழுத்தத்துடன் இடம்பெற வேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’