நா ட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தற்போதைய அரசியலமைப்பைக் 'கிழித்தெறிவதன்' மூலமே எமது நாட்டுக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டைத் தடுக்க முடியும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மார்பில் அடித்துக் கொண்டு தாய்நாடு தாய்நாடு எனப் புலம்புவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் எதுவுமே நடக்கப் போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்று ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுமென எமக்கெதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இவ் வசனங்கள் படுபயங்கரமானவையாகும். எம்மைத் தூக்கு மேடையில் ஏற்றுவதற்கான திட்டமே இதுவாகும். நாம் பெற்ற வெற்றியை தலைகீழாக மாற்றி இலங்கையின் சுயாதிபத்தியம், இறைமை ஆகியவற்றிற்கு மரண ஊர்வலம் நடத்துவதற்கான முயற்சியாகும். தெற்காசிய வலயத்தின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் யுத்த திட்டத்திற்கமைய இலங்கை முக்கியமான கேந்திர நிலையமாகும். அத்தோடு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் எண்ணெய் வளம் தொடர்பிலும் "கண்'' வைத்துள்ளன. இதனால் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் கைப்பொம்மையான ஆட்சியாளரை இலங்கையில் ஏற்படுத்துவதே எமக்கெதிரான சதித் திட்டங்களுக்கு காரணமாகும். புலிகள் சார்பான சர்வதேச தமிழ் குழுக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதை தடுக்கவே முயற்சிக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா எமக்கெதிராக பிரேரணையை முன் வைத்து பொறியில் சிக்க வைக்க முயற்சிக்கின்றது. எனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட தென்னாபிரிக்க நாடுகளுடன் எமது நட்புறவைப் பலப்படுத்தி நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு சலுகைகளை வழங்கி அனைவரையும் ஓரணியில் இணைத்துக் கொள்வதன் மூலமே எமக்கெதிரான சக்திகளை தோல்வியடையச் செய்ய முடியும். அதைவிடுத்து தாய் நாடு தாய் நாடு எனக் கூறுவதாலும் உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் நாட்டுக்கு எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’