முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது
இலங்கை அணி. அடிலெய்டில் நடைப்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய அணி வீரர்கள் வார்னர் 140 பந்துகளில் 4 பவுண்டரிகளுடனும், 1 சிக்சருடனும் 100 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணை சேர்ந்து விளையாடிய அணித் தலைவர் கிளார்க், தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். வெறும் 91 பந்துகளில் 4 சிக்சர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 117 ஓட்டங்களை எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த வீரர்கள் மிகச் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 271 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. ஜயவர்தன 76 பந்துகளில் 80 ஓட்டங்களை எடுத்து பாட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியதையடுத்து தொடர்ந்து களமிறங்கிய சங்ககாராவும் சிறப்பாக விளையாடி, 57 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்ஷான் 119 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்களை எடுத்து 38வது ஓவரில் பிரட் லீயின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த சந்திமால், 17 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டதோடு 3ஆவது இறுதிப் போட்டி நாளை மறுதினம் அடிலெய்டில் நடைபெறும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’