இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்ற, பெரும் அவலங்களை ஏற்படுத்திய யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருட காலத்தின் போது நிலைத்திருக்கக்கூடிய தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுவதற்கான தனது சொந்த மார்க்கத்தை வகுத்துக்கொள்ள இலங்கைக்கு போதிய கால அவகாசமும் வாய்ப்பும் காணப்பட்டது' என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் எய்லின் சேம்பர்லின் கூறினார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறுதலை ஊக்கப்படுத்துவது தொடர்பான தீர்மான வரைவு 1.2ஐ அறிமுகம் செய்து, ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் எய்லின் சேம்பர்லின் ஆற்றிய உரை பின்வருமாறு, 'இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்ற, பெரும் அவலங்களை ஏற்படுத்திய யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருட காலங்களில் இலங்கை மக்களுக்கு சமாதானமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதியுயர்மட்ட அதிகாரம் உள்ளவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு ஒத்த சிந்தனைப் போக்குள்ள நாடுகளுடன் இணைந்தும், தனித்தும் எனது அரசாங்கம் முயன்று வந்தது. இந்த மூன்று வருட காலத்தின் போது நிலைத்திருக்கக்கூடிய தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுவதற்கான தனது சொந்த மார்க்கத்தை வகுத்துக்கொள்ள இலங்கைக்கு போதிய கால அவகாசமும் வாய்ப்பும் காணப்பட்டது. மிக அண்மையில் கூட, இலங்கை அமைத்துக்கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு அமைய நடவடிக்ழக எடுக்குமாறு இலங்கையை ஊக்கப்படுத்தினோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை முன்வைக்கும் என நாம் எண்ணியிருந்தோம். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வளங்களை சாதகமாகப் பயன்படுத்துவதற்கு நாம் தனித்தும் ஒரே சிந்தனைப் போக்குள்ள நாடுகளுடன் இணைந்தும் இலங்கையை ஊக்குவித்தோம். மனித உரிமைகள் பேரவையில் இணைந்து செயற்பட நாம் இலங்கைணை ஊக்குவித்தோம். மனித உரிமை கவுன்ஸிலில், யுத்தத்தின் பின் உண்டான நிலைமைகளை வெற்றிகரமாக கையாண்ட பல நாடுகள் அங்கத்தவர்களாக உள்ளன. இந்த நாடுகளின் பல்வகையான அனுபவங்களிலிருந்து இலங்கை நன்மையடைய ஊக்குவித்தோம். தலைவர் அவர்களே, மதிப்புமிக்க பிரதிநிதிகளே, தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் என்பவற்றை வளர்த்தெடுக்க அர்த்தபூர்வமான ஏற்பாடுகள் இல்லாமல், நிலைபேறான சமாதானத்தை அடைய முடியாது. தன் சொந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை செயற்படுத்துவதில் இலங்கையின் ஊக்கமின்மை மற்றும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்படாத, விளக்கமளிக்கும் பொறுப்பு தொடர்பான பிரச்சினையை கையாள அவசியமான மேலதிக ஏற்பாட்டின் தேவை என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது, இந்த மிதமான சமநிலைப்பட்ட தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டு நிறைவேற்றுவது பொருத்தமாக இருக்கும். இலங்கை தனது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்தவும், நிலைபேறான நல்லிணக்க முயற்சிக்கு அடித்தளமாக அமையக்கூடிய பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் இலங்கையை ஊக்குவிப்பதாக இந்த தீர்மானம் உள்ளது. இதற்கும் மேலாக இந்த தீர்மானம், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடன் இணைந்து மனித உரிமைகள் தொடர்பில் செயற்படவும், இந்த பதவி வழியாக வரக்கூடிய நிபுணத்துவ சேவையால் நன்மை அடையவும் இலங்கையை ஊக்குவிக்கும். இந்த முன்மொழிவுகள் நியாயபூர்வமானவை. இவை ஆக்கபூர்வமானவை. நிலைமைக்கேற்ப கவனமானதாக பொருத்தமானதாக இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. மார்ச் 8இல் எமது முறைசாராத அமர்வின் போது எந்தவொரு பிரதிநிதி குழுவும் எழுத்துமூல திருத்தங்களை முன்மொழியவில்லை. முடிவாக, இந்த தீர்மானம், சமத்துவம், கௌரவம், நீதி, சுய மரியாதை என்பவற்றுடன் கூடிய நிலைபேறான சமவாய்ப்பு வழங்கும் சமாதானத்தை அடைய இலங்கை மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். நன்றி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’