ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (23) அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் கே.தயானந்தா அவர்கள் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தனர். தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கி அதன் மூலம் அரசாங்கத்துடன் வெறும் பகமையுணர்வை வளர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புகிறார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை கைவிட்டு காலம் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளால் விளக்கப்பட்டது. மேற்கூறிய காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக காத்திருப்பது காலத்தை விரயமாக்கும் செயல் என்றும் ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்போடு அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இக்கருத்தை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அதேவேளை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சகல கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட கருத்துக்களின்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலியுறுத்தப்பட்டு வரும் கருத்துக்கு சாதகமான நிலைமை தோன்றியிருப்பதோடு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற அதேவேளை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைகளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்பாக தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’