முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை ஏற்றிக்கொண்டு பயணித்த வாகன அணி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்துச் சம்பவத்தில் முதற்பெண்மனி ஷிரந்தி ராஜபக்ஷ எந்தவிதமான காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அத்துடன் அவர் செல்லவேண்டிய இடத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று அதிகாலை கொழும்பு-கண்டி வீதி, பிலிமத்தலாவ பகுதியிலுள்ள நானுஓயா பாலத்தடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் பாரிய சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதற்பெண்மணியை ஏற்றிக்கொண்டு விரைந்த வாகன அணியின் முன்னால் சென்ற சாரதி எதிர்முனையில் வந்த வாகனத்துடன் விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்கும் வகையில் பிரேக்கை அழுத்தியதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் பாடசாலை நிகழ்வொன்றில் பங்கேற்க முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சென்றதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் இராணுவ வீரரொருவரும் பெண் அதிகாரியொருவரும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தைத் தொடரந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. குறித்த வாகன அணி விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வாகனத்தைச் செலுத்தக்கூடிய வல்லமை உள்ளதா என்பது தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’