வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்மானம் ஒரு நல்லெண்ண முயற்சியாகவே கருதப்பட வேண்டும்!


ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்மானம் ஒரு நல்லெண்ண முயற்சியாகவே கருதப்பட வேண்டும் என்றும் இது போன்ற தீர்மானங்களை தொடர்ந்து வரப்போகும் சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுப்பார்களேயானால் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் இன்னமும் சுலபமாகி விடும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்
.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாகவும் ஐக்கிய இலங்கைக்குள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரiஐகளாகவும் வாழவுமே விரும்புகின்றார்கள். இந்த நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை அனைத்து தமிழ் தலைமைகளுக்கும் உண்டு. கடந்த காலங்களில் எமது மக்கள் சந்தித்து வந்த துயர்களுக்கும் அழிவுகள் மற்றும் அவலங்களுக்கும் ஈடாக எமது மக்களை தொடர்ந்தும் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழவைப்பதே அனைத்து தமிழ் தலைமைகளினதும் இலக்காக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசாங்கத்துடன் அர்த்தமற்ற பகமையுணர்வை வளர்த்து அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை மேலும் சிக்கலாக்கும் பொறுப்பற்ற செயலாக இருந்து விட முடியாது. ஆகவே இவைகள் குறித்து இனி வரும் காலங்களிலாவது அனைத்து தமிழ் தலைமைகளும் ஜதார்த்த பூர்வமான தீர்மானங்களை எடுப்பார்களேயானால் தமிழ் பேசும் மக்கள் அடைந்து வந்த துயர்களுக்கு தமிழ் தலைமைகளும்தான் காரணம் என்று நாம் கூறி வரும் விமர்சனங்களை ஒரு நல்லெண்ண நோக்கோடு தவிர்ப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். போட்டி அரசியலோ அன்றி மாற்று அரசியலோ நாம் திட்டமிட்டு வரிந்து கட்டி எடுத்த தீர்மானம் அல்ல. அவ்வாறானதொரு சூழ்நிலைக்குள் நாம் தொடர்ந்தும் இருப்பதை தவிர்ப்பது என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட சகல தமிழ் தலைமைகளும் நடைமுறை சார்ந்து சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். நான் அரசாங்கத்தில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக அமைச்சராக அங்கம் வகிப்பதன் ஊடாக அரசியல் அதிகாரங்களை பெற்றிருப்பதால் மட்டுமே எமது மக்களுக்கு ஆற்ற வேண்டிய அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுப் பணிகளையும் செய்து வருகின்றேன். இதே வேளை எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கான ஒரு சுமுகமான அரசியல் தளத்தையும் உடைய விடாமல் பாதுகாத்து வருகின்றேன். இந்த கடமைகளை அரசியல் துணிச்சலோடு ஆற்றுவதற்கு வேறு எவரும் முன்வரப்போவதில்லை. அவ்வாறு வருமாறு நான் எவரையும் கட்டாயப்படுத்தவும் விரும்பவில்லை. இதை விடவும் எமக்கு பிரதானமானது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒன்றுதான். நாம் கூறும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறை என்பது அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தாவது அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிஞ்ஞைகளை காட்ட முன்வரவேண்டும். இதன் ஊடாகவே நாம் முரண்பாடுகளை களைய முடியும். பகைமைகளை மறக்க முடியும். அதற்கு ஊடாக இணக்கமானதொரு வழிமுறையில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறை வேற்ற முடியும். இதை விட இதற்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை என்பதே நடைமுறை ஐதார்த்தமாகும். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எடுத்திருக்கும் தீர்மானத்தில் ஒரு ஒளிக்கீற்று தெரிகிறது. முன்னேற்றம் தெரிகிறது. இது போன்ற தீர்மானங்களை தொடர்ந்தும் அவர்கள் எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல தமிழ் தலைமைகளும் உணர்ச்சி பூர்வமாக அன்றி உணர்வு பூர்வமான மதிநுட்பத்தோடும் நுண்ணறிவோடும் செயற்படுவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களை கௌரவமானதொரு அரசியல் தீர்வு நோக்கி வழி நடத்தி செல்ல முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’