வி ஜயகாந்த்தின் சிறு வயது முதல் உற்ற தோழனாக விளங்கி, விஜயகாந்த் திருமணத்திற்குப் பிறகு அவரை விட்டு ஓரம் கட்டப்பட்ட இப்ராகிம் ராவுத்தர் இன்று அதிமுகவில் இணைந்தார்.
விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் மதுரையில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். விஜயகாந்த சென்னைக்கு வந்து நடிகராக முயன்றபோது அவருக்கு துணையாக இருந்தவர் ராவுத்தர். விஜயகாந்த்தின் வளர்ச்சியி்ல் ஆனந்தம் கண்டவர். விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு பாடுபட்டவர். விஜயகாந்த்தை வைத்துப் பல படங்களையும் தயாரித்தார். இவர்களது நட்பு அந்தக் காலத்தில் பெரும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது. அப்படி ராவுத்தர் பேச்சை விஜயகாந்த் தட்ட மாட்டார், விஜயகாந்த் பேச்சை ராவுத்தர் தட்ட மாட்டார். இந்த நட்புக்கும் பின்னர் பங்கம் வந்தது. விஜயகாந்த்துக்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் ஒரேயடியாக ராவுத்தரவை விட்டுப் பிரிந்து விட்டார் விஜயகாந்த். இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது சத்தியமாக இதுவரை யாருக்குமே தெரியவில்லை. கடந்த பல வருடங்களாகவே அமைதியாக இருந்து வருகிறார் ராவுத்தர். படத் தயாரிப்பிலும் ஈடுபடுவதில்லை. இடையில் சில காலம் காங்கிரஸில் இருந்தார் ராவுத்தர். ஆனாலும் ஆக்டிவாக அவர் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ராவுத்தரும், நடிகர் வடிவேலுவும் திடீரென சந்தித்துப் பேசியதாகவும், இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர்களை அதிமுகவுக்குக் கொண்டு வரும் வேலையில் நடிகர் ராதாரவி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ராவுத்தர் அதிமுகவில் வந்து இணைந்தார். ராவுத்தரின் அதிமுக வருகை, விஜயகாந்த்தை குறி வைத்தா அல்லது தற்செயலானதா என்பது தெரியவில்லை. தே.மு.தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.கவில் இணைந்தனர்: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டார் இப்ராகிம் ராவுத்தர். இந்த நிகழ்ச்சி அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடந்தது. ராவுத்தர் தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிகவினரும் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களில் முக்கியமானவர் சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட வேல்முருகன் ஆவார். மேலும் தேமுதிக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீரபாண்டியன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாரி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜெய்சந்த் ஜேக்கப் உள்ளிட்டோரும் இன்று அதிமுகவில் இணைந்த தேமுதிகவினரில் முக்கியமான சிலர் ஆவர். குயிலியும் வந்தார்: இதேபோல நடிகை குயிலியும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த காலங்களில் இவர் திமுக தரப்புக்கு நெருக்கமாக நடந்து கொண்டவர் என்பது நினைவிருக்கலாம். இணைந்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது: ஜெயலலிதா அதிமுகவினல் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அதிமுகவில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். குறிப்பாக இத்தனை பெண்களும், இளைஞர்களும் தங்களை கட்சியில் இணைத்துக் கொள்வதை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எத்தகைய நம்பிக்கையுடன் அ.தி.மு.கவில் இணைய வந்து உள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்கள் அனைவருக்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலம் அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’