விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் பிரான்ஸில் அண்மையில் தபால் முத்திரைகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறான முத்திரைகளுடன் இலங்கைக்கு கடிதங்கள் வந்துசேர்ந்தால், அந்த முத்திரைகளை நீக்கிவிட்டுத்தான் கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்று இலங்கைத் தபால்துறை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் சின்னம், அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கம் சார்ந்த படங்களுடன் பிரான்ஸ் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் செறிந்துவாழும் சில புலம்பெயர் நாடுகளில் அண்மையில் வெளியான தபால் முத்திரைகள் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறன. சர்வதேச தபால்சேவை தொடர்பான விதிகளை ஒருங்கிணைக்கும் யூபியூ என்ற ஐநாவின் உலகளாவிய தபால் சங்கத்தின் சமவாயத்தின்படி, ஒரு நாட்டில் புழக்கத்திலுள்ள தபால் முத்திரைகளை அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச தபால் சேவையின் போது அங்கீகரிக்கின்றன. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் சார்பான தபால் முத்திரைகள் இலங்கைக்கு வந்துசேருமானால், சர்வதேச தபால் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்படப்போவதில்லை என்று இலங்கை தபால் சேவை அறிவித்துள்ளது. இவ்வாறான தபால் முத்திரைகளுடன் வந்துசேரும் பொதிகள் எங்கிருந்து வருகின்றன, யாருக்கு சென்று சேருகின்றன என்பது போன்ற விபரங்களை பதிவு செய்துகொண்டு, அந்த முத்திரைகளை நீக்கிவிட்டு பொதிகளை சென்று சேர வேண்டிய நபருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக இலங்கைத் தபால் மாஅதிபர் எம்.கே.பி திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார். இறைமையுள்ள நாடு என்ற ரீதியில், எந்தவொரு சர்வதேச சட்ட ஒழுங்குவிதியையும் புறந்தள்ளிவிட்டு இறைமைக்கு ஏற்றவகையில் தான் செயற்பட வேண்டுமென்பது அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தபால் திணைக்களம் செயற்படுவதாகவும் தபால் மாஅதிபர் கூறினார். நாட்டின் இறைமைக்கு எதிரானது என்று தாம் கருதும் இவ்வாறான தனிப்பட்ட ரீதியிலான தபால் முத்திரைகள் வெளியிடப்படும் நாடுகளுக்கு இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்றும் இலங்கை தபால்மா அதிபர் திசாநாயக்க தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’