யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்கு கொழும்பிலிருந்து சென்றவர்கள், வவுனியாவில் வைத்து தடுக்கப்பட்டனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட லலித் மற்றும் குகனை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினரின் மக்கள் போராட்ட இயக்கமும், நாம் இலங்கையர் அமைப்பும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிலையில், வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் புதிதாக சோதனைச்சாவடி அமைத்து, யாழ்ப்பாணம் சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து வைத்ததுடன் சோதனை நடத்தினர். நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்கள் பயணித்த பேரூந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 12 பஸ்கள் உட்பட 20 வாகனங்களில் இவர்கள் பயணம் செய்தனர். இத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வந்து அனைத்து வாகனங்களும் கனகராயன்குளம் மற்றும் புளியங்குளம் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டன. காலையில் இருந்து மாலை வரை போக்குவரத்து சீராக இடம்பெறாமையினால் பலரும் தமது பயணத்தை நிறுத்தி மீள திரும்பி சென்றதுடன் சிலர் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியேற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சுமார் 800 பேர் தடுக்கப்பட்டதாக மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த தெரிவித்தார். மாலை 5 மணிக்கு நாம் ஓமந்தையை அடைந்தோம். யாழ்ப்பாணத்திற்கு நுழைய எமக்கு இராணுவம் அனுமதி வழங்கவில்லை என சமீர கொஸ்வத்த கூறினார். வீதிகள் திருத்தப்படுவதையே இவ்வாறு தாம் தடுக்கப்பட்டமைக்கு காரணமாக காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை யாழ். பஸ் நிலையத்தை சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாக டெலோ அரசியல் குழுத் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணம் செல்லவிருந்தவர்கள் இரவு 7 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பியனுப்பப்பட்டதாக நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’