ஒருகாலத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கசப்பான 30 வருட போராட்டத்தில் அங்கம் வகித்த ஆயிரக்கணக்கான தமிழ் புலிப் போராளிகள், சமூகத்துக்கு மீளத் திரும்பி தங்கள் கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு ஒரு இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு முன்னாள் போராளி மட்டும் தனது கடந்த காலத்தை வெள்ளித் திரையில் ஏற்று நடித்திருப்பதோடு தனது நடிப்பின் மூலம் ஒரு செய்தியை பரப்பிக் காட்டுகிறார். 25 வயதான சாந்தலிங்கம் கோகுலன், மே 2009ல் தமிழ் புலிப் போராளிகள் ஸ்ரீலங்கா அரசாங்கப் படையினரால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு அதில் ஒரு அங்கத்தவராக இணைந்திருந்தார். ஒரு போராளியான கோகுல்ராஜின் பணி சிறுபான்மைத் தமிழர்களுக்கு தனியான ஒரு நாட்டை அமைப்பதற்கான ஆதரவைத் தேடுவது உட்பட, எல்.ரீ.ரீ.ஈ என அழைக்கப்படும் தமிழ் புலிகளின் சித்தாந்தங்களைக் கற்பதும், அதை மற்றவர்களுக்கு போதிப்பதாகவும் இருந்தது. ஒரு காலத்தில் கிளர்ச்சியாளர்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழிருந்த ஸ்ரீலங்காவின் வட பகுதியைச் சேர்ந்த மாங்குளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி சின்குவாவுடன் பேசும்போது கோகுல்ராஜ், ஒரு பயங்கரவாத அமைப்பாக குறிக்கப்பட்டிருக்கும் தமிழ் புலிகளுடன் இணைவதற்கு தான் நிர்ப்பந்தப் படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். “2008ம் ஆண்டு யுத்தம் அதன் உச்ச நிலையில் இருந்தபோது அவர்களால் கட்டாயப் படுத்தப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ யில் இணைக்கப்பட்ட பின், நான் அவர்களின் அரசியல் பிரிவில் ஒரு அங்கத்தவனாக இருந்தேன். நான் என்னுடைய தாய் தந்தையரையும் எனது சகோதரன் மற்றும் சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு, நான் என்ன செய்ய வேண்டுமென்று தமிழ் புலிகள் விரும்பினார்களோ அதைச் செய்யவேண்டியிருந்தது” என்று சொன்னார் அவர். ஒரு வருடம் அளவில் அவரது புதிய வேலையில் இருந்தபோது யுத்தம் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்தது, மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் புலிகள் வசமிருந்த சிறிய பகுதியை நெருங்கியபோது, கோகுல்ராஜூக்கு அங்கிருந்து தப்பியோடி தனது குடும்பத்தினருடன் இணைவதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது. “அப்போது இராணுவம் நிலை கொண்டிருந்த ஓமந்தைக்கு நான் எனது குடும்பத்தினருடன் வந்து சரணடைந்தேன். அங்கிருந்து புனர்வாழ்வு முகாமுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்” என்று கோகுல்ராஜ‘ தெரிவித்தார். போர் அதன் இறுதி முடிவை எட்டியபோது கோகுல்ராஜ் புனர்வாழ்வை அடைவதில் தனது நேரத்தைச் செலவிட்டார். அது பிற்காலத்தில் அவரை சுதந்திரமாக சமூகத்திடம் திரும்புவதற்கு ஏற்ற தயாரெடுப்புகளை வழங்கியது. தனது புனர்வாழ்வுக் காலத்தின்போது அந்த முன்னாள் போராளி பிரபலமான ஒரு ஸ்ரீலங்கா நடிகையைச் சந்தித்தார், அவர்தான் அனோஜா வீரசிங்க, அவர் கோகுல்ராஜூக்கும் மற்றும் சிலருக்கும் நடிப்பு பயிற்சியை வழங்கினார். புனர்வாழ்வு முகாமுக்கு வருகை தந்திருந்த சில விருந்தாளிகளுக்காக வேண்டி ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவேளையில் ஒரு உள்ளுர் திரைப்பட இயக்குனரின் கண்களில் கோகுல்ராஜ் சிக்கினார். ஸ்ரீலங்கா திரைப்பட இயக்குனரான சஞ்ஜய லீலாரத்ன தனது படங்களில் ஒன்றான, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு தமிழ் புலிப் போராளியை அடிப்படையாக கொண்ட படமொன்றில் கோகுல்ராஜை நடிக்க வைப்பதற்கான அனுமதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார். “நாங்கள் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தோம். மற்றும் பின்னர் அந்தப் படம் சமீபத்தில் கொழும்பில் திரையிடப்பட்டது. அனோஜா எனக்கு வழங்கிய பயிற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதன் காரணமாகத்தான் என்னால் அந்தப்படத்தில் நடிக்க முடிந்தது” மகிழ்ச்சிப் பெருக்குடன் கோகுல்ராஜ் தெரிவித்தார். செல்வம் என்ற தலைப்பைக் கொண்ட அந்தப்படத்தின் அரங்கேற்றக் காட்சி, 30 வருடங்களாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகப் புகழப்படும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பங்கேற்புடன் கொழும்பில் திரையிடப்பட்டது. இந்தப்படத்தில் போரின் முடிவின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிப் போராளி ஒருவர் புது வாழ்வு வாழத்தொடங்குவதாக உள்ள கதாபாத்திரத்தை கோகுல்ராஜ் ஏற்று நடித்திருந்தார். தனக்கு நடிப்பதற்கு ஏற்கனவே மற்றொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்த கோகுல்ராஜ், நடிப்பின் உயரங்களை எட்டுவதற்குரிய பல அரிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். யுத்தக் குற்றங்களுக்காக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்காவுக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதற்கு மத்தியிலும், கோகுலராஜைப் போன்ற ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு சமூகத்திடம் திரும்பியுள்ளார்கள். “முன்பு அது சாதாரண போராகவும் மற்றும் அதிக மோதல்களுமாக இருந்தது. எதிர்காலம் எனக்கு ஒருபோதும் குறிக்கோளுடையதாக இருந்ததில்லை,ஆனால் இப்போது சமாதானத்துடன் நான் எப்போதும் செய்வதற்கு விரும்பிய ஒன்றைச் செய்வதற்கான நல்வாய்ப்பு கிட்டியுள்ளது”என்றார் கோகுல்ராஜ். தனது மாங்குளம் வீட்டுக்குத் திரும்பியுள்ள கோகுல்ராஜ், பாடுவதிலும் தனது சொந்த இசைக்குழுவுடன் நிகழ்ச்சி நடத்துவதிலும் தனது நேரத்தைச் செலவிடுவதோடு மற்றும் பிரகாசமான நல்ல ஒரு எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். நன்றி: சண்டே லீடர் தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’