அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவைகள் உதாசீனம் செய்யப்பட்டதன் விளைவாகவே ஹம்பாந்தோட்டை, தங்காலை பிரதேசத்தில் கொலை சம்பவம் இடம்பெற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்காலை, மெதில்ல பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வைத்து பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டதுடன் அவரது மனைவி படு காயமடைந்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டு வந்த தங்காலை பிரதேச சபை தலைவர் சம்பத் சந்த்ரபுஷ்ப பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும், விதரன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் மனைவி துப்பாக்கிச் கூட்டினால் படுகாயமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதியானதும், பக்கச் சார்பற்றதுமான சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜயலத் ஜயவர்த்தன, இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம்; கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்ற பாதுகாப்புச் செயலாளர், அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் உதாசீனம் செய்த காரணத்தினால் தான் இவ்வாறான துரதிர்சஸ்டவசமான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானிய பிரஜையின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபரான தங்காலை பிரதேச சபை தவிசாளர் வழமையாகவே ரி - 56 ரக துப்பாக்கியுடன் சஞ்சரிப்பதனை அப்பிரதேச மக்கள் பலர் பார்த்துள்ளனர். குறித்த அரசியல்வாதியை பாதுகாக்கும் தரப்பினர், சம்பவத்தில் படுகாயமடைந்த ரஷ்ய பெண்ணிற்கு அவதூறு ஏற்படும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகின்றது. இந்த நிலையில் தங்காலை கொலை சம்பவம் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. இது அரசாங்கத்தின் கடமை. கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் மனைவி படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, மேலதிக சிகிச்சைகளுக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புபட்ட நபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விசாரணை முடியும் வரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என கோருகின்றேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’