தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி தமிழ் மக்கள் மோசம் போகக் கூடாது. சம்பந்தன் குழுவினர் தன்னிலையை அறிந்து செயற்படுவதே சிறந்தது. வீண் பிடிவாதம் பிடித்து புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அழிவுகளையே சந்திக்க நேரிடும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கம் காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை கூட்டமைப்பு எட்ட முயற்சிக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம், அங்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சம்பந்தன் குழுவினர் பேசித்திரிந்தால் அப்பாவி தமிழ் மக்களுக்கு என்றும் விடிவு ஏற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக ரணவக்க மேலும் கூறுகையில், "அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைராக்கியத்துடனும் பிரிவினைவாத சிந்தனைகளுடனும் செயற்படுகின்றனர். வெறும் 4 வீதமான வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு 96 வீதமான பெரும்பான்மைக்கு சவால் விடுவது வேடிக்கையான விடயம். புலிகள் ஆயுதமுனையில் போராடியே தோல்வி கண்டனர். இந்த நிலையில் மீண்டும் தனி நாடு தர வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம் என்று பேசுவது மீண்டும் அழிவுக்கே வழிவகுக்கும். சிங்கள மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைராக்கியத்துடன் செயற்படவில்லை. 11 ஆயிரம் புலிகளைக் கைது செய்து அவர்கள் அனைவருக்கும் மறுவாழ்வு அளித்து விடுதலை செய்யும்போது சிங்கள மக்கள் அதற்கு ஆதரவளித்துச் செயற்பட்டனர். எனவே, சிங்கள மக்களிடமிருந்து கூட்டமைப்பு பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். 1947ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் நாட்டில் ஏனைய சமூகங்கள் எவ்வாறு சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றன என்பதனை தமிழ் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். செல்வநாயகம் ஆரம்பித்து வைத்த பிரிவினைவாத கிளர்ச்சிகளினால் தமிழ் மக்களே பெரிதும் அழிவுகளைச் சந்தித்தனர். மீண்டும் இவ்வழிவுகளுக்குள் தமிழ் மக்களை சம்பந்தன் குழுவினர் தள்ளிவிடக் கூடாது" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’