லண்டன், டிச.4 (டிஎனஎஸ்) பழம்பெரும் நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருது பெற்றவருமான தேவ் ஆனந்த் மாரடைப்பால் லண்டனில் காலமானார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் புகழ் பெற்றுள்ளார். 88 வயதாகும் தேவ் ஆனந்த் 2001-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002-ம் ஆண்டு தாதா சாஹேப் பால் கே விருதும் பெற்றுள்ளார்.
இந்திப்பட உலகின் மார்க்கண்டேயன், எவர்கிரீன் ரொமாண்டிக் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்பட்டவர் தேவ் ஆன்ந்த். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிரமப்பட்ட அவர், சிகிச்சைக்காக லண்டன் வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் லண்டன் சென்றார். அவருடன் மகன் சுனில் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். இந்நிலையில் தேவ் ஆனந்தின் உடல்நிலை மோசமடைந்து நேற்று (டிச.3) இரவு அவர் காலமானார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இந்த தகவல் அறிந்தும் இந்திப்பட உலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 1946 ல் ஹம் ஏக் ஹயின் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளான, பத்மபூஷன் விருதும் (2001ல்), தாதா சாகேப் பால்கே விருதும் (2002ல்) வழங்கப்பட்டன. தேவ் ஆனந்த்தின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்திப்பட உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் தேவ்ஆனந்த், வித்தியாசமான உடை அலங்காரம் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை வசீகரித்தவர். இவர் அணியும் தொப்பி மிகவும் பாப்புலர். கோட்டு அணிந்து உடைக்கு மேலே கழுத்தை சுற்றி கர்ச்சீப்பை கட்டி `டை' போல் தொங்க விட்டபடி தோன்றுவது இவரது தனி ஸ்டைல். இந்த ஸ்டைலை இந்தி ரசிகர்கள் காப்பி அடித்தனர். 1946-ம் ஆண்டில் இந்திப்பட உலகில் அறிமுகமான தேவ் ஆனந்த் சுமார் 65 வருடங்கள் இந்திப் பட உலகில் கொடிகட்டி பறந்தார். இளமை மாறாமல் இருந்ததால் `மார்க்கண்டேயன் நடிகர்' என்று புகழப்பட்டார். 1923-ம் ஆண்டில் பிறந்த தேவ்ஆனந்த் தனது 23-வது வயதில் (1946-ல்) இந்திப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். 'ஹம் ஏக் ஹெய்ன்' என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் (1947) 'ஜிட்டி' என்ற படம் ரிலீசாகி சக்கைபோடு போட்டது. அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்டானது. பேயிங் கெஸ்ட், பாஸி, ஜுவல் தீப், சி.ஐ.டி., ஜானி மேரா நாம், அமிர்கரிப், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஷ் பார்டெஸ்' உள்பட பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 'ஜானி மேரா நாம்' என்ற படம் தமிழில் 'ராஜா' என்ற பெயரில் சிவாஜியை கதாநாயகனாக வைத்து தயாரிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவ்ஆனந்த் 1949-ல் `நவகேதான் இண்டர் நேஷனல் பிலிம்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 35-க்கும் மேற்பட்ட சினிமாக்களை தயாரித்துள்ளார். வஹிதா ரஹ்மான், ஹேமா மாலினி, வைஜயந்தி மாலா, ரேகா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடித்து உள்ளார். சில படங்களையும் இயக்கி உள்ளார். கடைசியாக இசையை அடிப்படையாக கொண்ட அமெரிக்க படம் ஒன்றை இயக்கினார். இந்தப் படத்தில் அமெரிக்க முன்னணி நடிகர், நடிகைகளுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது சமீபத்திய படங்களான 'அவ்வால் நம்பர்', 'சாவ்குரோர்', 'சென்சார்' 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' 'சார்ஜ்ஷீட்' ஆகிய சினிமாக்கள் தற்கால சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. இந்த படங்களில் தேவ் ஆனந்த் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். ஆனால் 'அவ்வால் நம்பர்' படத்துக்கு பின்னர் வந்த அவரது படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல ஈட்டி தரவில்லை. தனது சில படங்கள் தோல்வி அடைந்தது பற்றி அவர் குறிப்பிடுகையில், 'நான் எப்போதும் கவலைக்கு இடம் கொடுப்பது இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றிதான் யோசிப்பேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம்' என்று கூறுவார். இந்திப்பட உலகில் பல சாதனைகளை படைத்துள்ள தேவ்ஆனந்துக்கு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் கிடைத்துள்ளன. ஆஸ்கர் விருதுக்கு சமமான 2 'பிலிம்பேர் அவார்டு'கள் இவருக்கு வழங்கப்பட்டது. 1958-ல் 'கலாபாணி' படத்துக்கும், 1966-ல் 'கைடு' படத்துக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்தில் அப்போதைய ஆசிய அழகி பட்டம் வென்ற ஜீனத்அமனை கதாநாயகியாக அறிமுகப் படத்தினார். இந்த படத்தில் வரும் தம்ஹரே தம்' பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இதன்மூலம் ஜீனத்அமன் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தார். `கைடு' படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் 5 விருதுகளை தட்டிச் சென்றது. 'கைடு' படம் பின்னர் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. 1993-ல் பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1996-ல் ஸ்கிரீன் வீடியோகானின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு கிடைத்தது. கடந்த 2001-ல் மதிப்பு மிக்க `பத்மபூஷன்' விருது வழங்கி இவர் கவுரவிக்கப்பட்டார். 2002-ல் `தாதா சாஹேப் பால்கே விருது' வழங்கப்பட்டது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற 3 பரிமாணங்களில் வெற்றிவாகை சூடியவர் தேவ்ஆனந்த். மரணம் அடைந்த தேவ் ஆனந்த்துக்கு சேட்டன் ஆனந்த், விஜய் ஆனந்த் என்ற இரண்டு சகோதரர்களும், ஷீல்காந்தாகபூர் என்ற சகோதரியும் உள்ளனர். பிரபல இந்திப்பட இயக்குனர் சேகர்கபூரின் தாயார்தான் ஷீல்காந்தாகபூர். தேவ் ஆனந்தின் சகோதரர்களும் சினிமா துறையில்தான் உள்ளனர். தேவ்ஆனந்தின் பல படங்களை விஜய் ஆனந்த் இயக்கினார். தேவ் ஆனந்த்தின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. பிரதமர் இரங்கல்: நடிகர் தேவ் ஆனந்த் மரணமடைந்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துளளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேவ் ஆனந்த் மிகப்பெரிய நடிகர். கடந்த 5 தலைமுறை சினிமா ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். அவரது மரணம் கேட்டு வருத்தமடைந்துள்ள லட்சகணக்கான மக்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தேவ் ஆன்ந்த் மரணத்திற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா இரங்கல்: தேவ்ஆனந்த் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் கமலஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் தேவ்ஆனந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். (டிஎன்எஸ்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’