தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.
இந்த விவாதத்திற்கு நான் தயாராக இருப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக யாரும் கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். கைத்தொழில் முதலீட்டு அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயேஅவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், வடக்கில் தமிழ் மக்களின் ஒரு அங்குல நிலத்தினையும் நான் அபகரிக்கவில்லை. அவ்வாறு நான் அபகரித்துள்ளதாக கூறுபவர்களால் நிரூபிக்க முடியுமா? வட மாகாண மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நான் தலையீடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பாக என்னை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கிணங்க வட மாகாணத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நானே பொறுப்பாகவுள்ளளேன். இதனால், வட மாகாணத்தில் நடைபெறும் எந்த அபிவிருத்தி திட்டதிலும் நான் தலையிட முடியும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுத்தேயாக வேண்டும். வடக்கில் சுமார் 100 முஸ்லிம்களுக்கு நான் வேலைவாய்ப்பு வழங்கியதாக போலி பிரசாமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்பினை நான் வழங்கவில்லை. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து கடந்த வருடம் இந்த வேலைவாய்ப்புக்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தனர். இதன் மூலம் புத்தளத்தில் இயங்கிய வட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்ற செயலணியில் கடமையாற்றி சுமார் 100 பேர் வட மாகாண திணைக்களங்களில் நியமிக்கப்பட்டனர். சுமார் 100,000 முஸ்லிம்கள் வாழும் வட மாகாணத்தில் 100 பேருக்கு அரசாங்கத்தினால் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவது தவறா? வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் போது முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. அதேபோன்று முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் போது தமிழர்களும் எதிர்க்கக்கூடாது. வடக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக சில தீய சக்திகள் செயற்படுகின்றன. இச்சக்திகளே தான் தமிழ் மக்களின் காணிகளில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகளிலேயே அவர்களை குடியேற்றுகின்றோம். குறித்த காணிகளில் அவர்கள் வாழ்ந்ததற்கான உறுதி பத்திரங்களும் உண்டு. குறித்த பிரதேசங்களில் வாழாத முஸ்லிம்களை நான் ஒரு போதும் மீள்குடியேற்றவில்லை. அதேபோன்று, வட மாகாணத்தில் வாழ்ந்திராத எந்தவொரு இனத்தையும் குடியேற்ற நான் அனுமதிக்கமாட்டேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’