வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 டிசம்பர், 2011

வட மாகாணத்தின் ஆளுநர் தமிழருக்கு எதிரானவர்: சுரேஷ் எம்.பி.


யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் வட மாகாண ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. யான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் ஒரு ஜனநாயகமும் ஏனைய பகுதிகளில் வேறு ஜனநாயகமும் நிலவுகின்றதா என்றும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். சுரேஷ் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 1958 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. அதற்கான ஒழுங்கு விதிகள் 1966 இல் கொண்டு வரப்பட்டன. இதன்படி வடக்கு கிழக்கின் சகல அரச நடவடிக்கைகள் பொது நடவடிக்கைகள் பதிவுகள் அனைத்தும் தமிழ் மொழி மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை குறித்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பேசினார். எனினும் அம்பாறை மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அங்கு தமிழ் பேசும் அரச அதிபர் நியமிக்கப்பட்டது கிடையாது. அங்கு தமிழ் பேசும் மக்கள் 74 வீதமானவர்களாக உள்ளனர். இது இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டமானது 75 சதவீதம் தமிழ் பேசம் மக்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இதுவரையில் தமிழ் பேசும் அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் தான் இனிப்பான வார்த்தைகளையும் இன ஐக்கியம் குறித்தும் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிபருக்கு ஓரளவு தமிழ் பேச முடியும் என்றாலும் கூட அவரால் தமிழ் மொழியில் முழுமையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதே இங்கிருக்கும் கேள்வியாகும். யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்டன. எனினும் யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்நிலையில் அரசாங்கம் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனாலும் தமிழ் பிரதேசங்களுக்கு சிங்கள அதிகாரிகளை கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முன்னுதாரணமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சகல தேவைகளையும் நிறைவேற்றியதன் பின்னர் அங்கு சிங்கள அதிகாரிகளைக் கொண்டு செல்வது வேறு விடயமாகும். வடக்கு இலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு தனியார் காணிகள் இன்னும் இராணுவத்தினரின் பிடியிலேயே இருக்கின்றது. இதேவேளை சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. தனித் தமிழ் மாவட்டமாக முல்லைத்தீவு இருந்தது. எனினும் அங்கு ஒரே இரவில் 9 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவே யுத்தம் செய்தனர். அதில் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தைகளும் இழுபறியில் கிடக்கின்றன. பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு சுமுக வாழ்க்கையை ஏற்படுத்தி விட்டதன் பின்னர் உங்களது அதிகாரங்களை அங்கு கொண்டு சென்றால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை. மாகாணசபைகள் இருக்கின்றன. இவற்றுக்கு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். சபைகளுக்கு அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. அமைச்சர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கிருக்கும் அமைச்சர்களையும் மதிக்காது அனைத்து விடயங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரைப் போன்று செயற்படுகின்றார். அப்படியென்றால் மாகாண சபையோ மாகாண அமைச்சர்களோ இங்கு தேவையற்ற விடயங்களாகும். கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சபையின் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு ஒரு புறமிருக்க கிழக்கில் யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் அங்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அங்கு இன்னும் வட மாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அரசாங்கம் விரும்பினால் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் விரும்பாவிட்டால் நடைபெறாது என்ற நிலையில் தான் வடக்கின் நிலை இருக்கின்றது. இதேவேளை, வட மாகாணத்தின் ஆளுநராக இருக்கின்றவர் அங்குள்ள எந்தவொரு எம்.பி.யும் எந்தவிடயம் குறித்தும் கலந்து பேசுவது கிடையாது. ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் பேசியிருக்கலாம். வடக்கில் பெரிய அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் எந்தவொரு கூட்டங்களுக்கும் அழைத்ததில்லை. ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார். நியமனங்கள் கூட அங்கு ஆளுநருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் தேவைப்பட்ட வகையிலேயே இடம்பெறுகின்றன. வட மாகாண ஆளுநர் இராணுவ அதிகாரியாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் கடற்படை அதிகாரியாகவும் இருக்கின்றனர். இவர்கள் ஜனாதிபதிக்கு தேவையாக இருப்பதால் ஒன்றும் நடப்பதில்லை. ஏனைய மாவட்டங்களிலும் கூட ஆளுநர்கள் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்களா எனக் கேட்கிறேன். வடக்கில் ஒரு ஜனநாயகம் ஏனைய பகுதிகளில் இன்னுமொரு ஜனநாயகமா இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம் செல்கையில் பார்த்தால் படையினருக்கான நினைவுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனினும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடியதன் நினைவாக இருந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’